

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தனது குழந்தைப் பருவ தோழியான பிரியங்கா சவுத்ரியை மணந்தார்.
இவர்களுடைய திருமணம் டெல்லியில் உள்ள போஷ் ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பிரியங்கா சவுத்ரி, நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். ரெய்னாவும், பிரியங் காவும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் இப்போது அவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
திருமண விழாவில் ரெய்னாவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஐசிசி சேர்மன் என்.சீனிவாசன், இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் டுவைன் பிராவோ, மைக் ஹசி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங், மல்யுத்த வீரர் சுஷீல் குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். இதுதவிர முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளை யாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். வரும் 8-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கு கிறது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் தனியாக சுற்றித்திரிந்த ரெய்னா, இந்த முறை தனது மனைவியின் முன்னிலையில் கலக்க காத் திருக்கிறார்.
விதவிதமான உணவு
ரெய்னாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் பொறித்த ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மட்டன் பிரியாணி, மட்டன் குருமா, துந்தே கெபாப், இந்திய ரொட்டி வகைகள், காரமான தானிய சட்னி என விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. 4 பேர் அடங்கிய துந்தே சமையல் கலைஞர்கள் குழு இந்த உணவுகளை தயார் செய்திருந்தது.
குறிப்பாக துந்தே கெபாப் உணவுகள் மிகுந்த சுவை கொண்ட தாகும். இறைச்சிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் இந்த துந்தே கெபாப் உணவுகள் லக்னோவில் மிகவும் பிரபலமான தாகும். பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், துந்தே கெபாப் பிரியர் ஆவார். அவர் வீட்டில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளின்போது துந்தே கெபாப் உணவுகள் பரிமாறப்படுவது வழக்கம். ஜாவித் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்டோரும் துந்தே கெபாப் பிரியர்கள் ஆவர்.