Last Updated : 24 Apr, 2015 10:01 AM

 

Published : 24 Apr 2015 10:01 AM
Last Updated : 24 Apr 2015 10:01 AM

பெங்களூருக்கு எதிரான வெற்றி: டிவில்லியர்ஸை வீழ்த்தியது திருப்புமுனை- சுரேஷ் ரெய்னா பேட்டி

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என சென்னை சூப்பர் கிங்ஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் 32 பந்துகளில் 62 ரன்கள் குவித்த ரெய்னா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி குறித்துப் பேசிய ரெய்னா, மேலும் கூறியதாவது: டிவில்லியர்ஸும், விராட் கோலியும் களத்தில் நின்றபோது நிச்சயம் பெங்களூர் அணி வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தபோது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதேநேரத்தில் விராட் கோலியும் போட்டியை வெற்றியில் முடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு போட்டியை அணுகினோம் என்றார்.

பெங்களூர் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கப்பட்டது ஆச்சர்யமளித்ததாகக் கூறிய ரெய்னா, “அந்த அணியின் கேப்டன் விராட் கோலி நேர்மறையாக சிந்திப்பவர். அதனால் அவருடைய முடிவு சரியானதாகவே இருக்கும்” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களை பாராட்டிய ரெய்னா, “குறிப்பாக ஆசிஷ் நெஹ்ரா சிறப்பாக பந்துவீசினார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல பங்களிப்பு செய்துள்ளார். இதேபோல் சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். நல்ல அனுபவம் கொண்டவரான அவருக்கு எப்போது தாக்குதல் பந்துவீச்சை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும்.

நெஹ்ரா எப்போதுமே மற்றவர்களின் வெற்றியையும் ரசிக்கக்கூடியவர். அதுதான் அவருடைய பந்துவீச்சுக்கு பலம். மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே போன்றவர்களுக்கும் பந்துவீச்சு தொடர்பான பல்வேறு விஷயங்களை நெஹ்ரா சொல்லிக் கொடுக்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x