

ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தபோது அவரின் விக்கெட்டை வீழ்த்தியதே எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டி யன்ஸை தோற்கடித்தது. சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள அதேவேளையில், மும்பை அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பைக்கு எதிராக 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிஷ் நெஹ்ரா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் கூறியதாவது: ரோஹித் சர்மா எப்படிப்பட்ட பேட்ஸ்மேன், அவர் ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுவார் என்பது அனைவருக் குமே தெரியும். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தபோது அவரு டைய விக்கெட்டை வீழ்த்தியது தான் திருப்புமுனை.
ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களை 3 பகுதியாகவும், டி20 கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் மூன்று ஓவர்களையும், சில நேரங்களில் கடைசியில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களையும் வீசக்கூடிய பவுலர்களில் நானும் ஒருவன். இன்றைய போட்டியிலும் கூட 15-வது ஓவரை வீச என்னை அழைத்தார் தோனி. அப்போது விக்கெட் வீழ்த்துவது அவசியம். ரோஹித்-போலார்ட் ஜோடி களத்தில் நின்றுவிட்டால் அடுத்த 4 அல்லது 5 ஓவர்களில் 80 அல்லது 90 ரன்கள் குவித்துவிடுவார்கள். அதனால் விக்கெட் எடுக்கப் பாருங்கள். தொடர்ந்து விக்கெட் எடுக்க முயற்சியுங்கள் என்று தோனி என்னிடம் கூறினார். அதுபோலவே விக்கெட்டும் கிடைத்தது என்றார்.