

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சைமோனா ஹேலப், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செரீனா தனது காலிறுதியில் 7-6 (4), 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கியை தோற்கடித்தார்.
சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ், சபைன் லிசிக்கியை வீழ்த்தியதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 700-வது வெற்றியைப் பதிவு செய்தார். டென்னிஸ் வரலாற்றில் 700 வெற்றி என்ற மைல்கல்லை எட்டிய 8-வது நபர் செரீனா. முதலிடத்தில் மார்ட்டினா நவரத்திலோவா உள்ளார். அவர் 1,442 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
செரீனாவுக்கு 700-வது வெற்றி
செரீனா தனது 700-வது வெற்றியை கேக் வெட்டி கொண் டாடினார். இதற்கு போட்டி ஏற்பாட்டா ளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கேக் வெட்டிய பிறகு இது தொடர்பாக பேசிய 33 வயதான செரீனா, “நான் 700-வது வெற்றி யைப் பதிவு செய்தது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. என்னால் முடிந்த அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறேன்” என்றார்.
செரீனா தனது அரையிறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை சந்திக்கிறார். ஹேலப் தனது காலிறுதியில் 6-1, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை தோற்கடித்தார்.
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஹேலப், வெற்றி குறித்துப் பேசியதாவது: இன்று நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்றைய ஆட்டம் என்னை வியக்கவைத்தது. இன்றைய ஆட்டத்தில் 2-வது செட்டில் 3-0 என்ற நிலை வரை சிறப்பாக ஆடி னேன். பின்னர் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தேன். ஸ்டீபன்ஸ் தனது ஆட்ட உத்தியை மாற்றியதால் எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. எனினும் இரு செட்களில் ஆட்டத்தை நிறைவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
முர்ரே-பெர்டிச் மோதல்
ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிச் தீமை தோற்கடித்தார். முதல் செட்டை இழந்தாலும், பின்னர் அபாரமாக ஆடி வெற்றி கண்டார் முர்ரே.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “தீம், முன்னணி வீரர்களை வீழ்த்தியிருந்ததால், அவர் கடும் சவால் அளிப்பார் என நான் எதிர்பார்த்தேன். மிக வலுவான வீரரான அவர், பந்தை மிக வேகமாக திருப்பியடிக்கிறார். மிகச்சிறப்பாக களத்தில் நகர்ந்து ஆடுகிறார்” என்றார்.
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் முர்ரே, தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.
பெர்டிச் தனது காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மொனாக்கோவை தோற்கடித்தார். இதுவரை மொனாக்கோவுடன் 7 போட்டிகளில் மோதியுள்ள பெர்டிச், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.