சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் இன்று பலப்பரீட்சை

சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

பெங்களூரில் இன்று நடைபெற வுள்ள ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் தங்களின் முந்தைய ஆட்டங்களில் தோல்வி கண்டதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தீவிரமாக உள்ளன. சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த தோல்விகளால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கோலி தலைமையிலான பெங்களூர் அணி, இந்த ஆட்டத்தில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும் சென்னை அணியும் வலுவான அணி என்பதால் பெங்களூர் அணி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

பெங்களூர் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தவிர எஞ்சிய வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருவது பின்னடைவாக அமைந்துள்ளது. எனினும் மும்பைக்கு எதிராக மன்விந்தர் பிஸ்லா, டேவிட் வியஸ் ஆகியோர் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியது ஆறுதலாக அமைந்தது.

எனவே இன்றைய ஆட்டத்தில் மன்விந்தர் பிஸ்லா, கெயில் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக், டேவிட் வியஸ், ரிலீ ரொசாவ் ஆகியோர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அந்த அணி வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். பெங்களூர் அணியின் பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது.

மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், வருண் ஆரோன், இக்பால் அப்துல்லா, அபுநெசிம் கூட்டணியின் பந்துவீச்சு எடுபட வில்லை. எனவே இந்த ஆட்டத்தில் வருண் ஆரோனுக்குப் பதிலாக அசோக் திண்டா இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் யுவேந்திர சாஹலை நம்பியுள்ளது பெங்களூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என எல்லா துறைகளிலும் வலுவான அணியாக உள்ளது. பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, மகேந்திர சிங் தோனி, பிராவோ என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ராஜஸ்தானுக்கு எதிராக 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்த பிராவோவிடம் இருந்து இந்த முறையும் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆசிஷ் நெஹ்ரா, ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா, டுவைன் பிராவோ ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணியும் பலம் சேர்க்கின்றன.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

சன்ரைஸர்ஸ் - கொல்கத்தா மோதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் மற்றொரு ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in