

வேகப்பந்து வீச்சு தற்போது இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
2010-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகே நிறைய இளம் இந்திய வீச்சாளர்களர்கள் வாசிம் அகரம் அறிவுறையில் வளர்ந்து வருகின்றனர்.
அசோக் திண்டா, இஷாந்த் சர்மா, யாதவ், மொகமது ஷமி ஆகியோர் பிரச்சினைகள் தோன்றும்போது வாசிம் அக்ரமை தொடர்பு கொண்டு வருவது தற்போது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது.
"கிரிக்கெட் ஆட்டம் பெற்றுள்ள பிரபலத்தின் காரணமாக வேகப்பந்து வீச்சும் பிரபலமாகி வருகிறது. இந்திய மக்கள் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் நேயம் ஆச்சரியகரியமானது. ஒரு ஐபிஎல் ஆட்டத்துக்கு 70,000 பேர் வருகிறார்கள் என்பது உண்மையில் ஆச்சரியமானது, உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த இளம் வீரர்கள் கூட தங்களது ஹீரோக்களான வருண் ஆரோன், ஷமி, யாதவ் ஆகியோரைக் கொண்டுள்ளனர்.
எனவே வேகப்பந்து வீச்சு இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது. ஆனால், இந்த இளம் வீச்சாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், வேகப்பந்து வீச்சு அல்லது பொதுவாக பந்துவீச்சு என்பது ஒரு ஸ்பெல்லுக்கு மட்டுமானது அல்ல. அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேகமாக எப்படி வீசுவது என்று இவர்கள் சிந்திக்க வேண்டும்.
உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோர் உள்ள நிலையில் அவர்களுக்கு பயிற்சியளிக்கத் தேவையில்லை. அவர்களுக்கு ஆக்சன் மற்றும் அடிப்படைகளை விளக்க வேண்டிய தேவையில்லை. இவர்களுக்கு சொல்லி, கொடுக்க வேண்டியது, சரியான ஸ்விங் பவுலிங்கை எப்போது செய்வது, குறிப்பிட்ட பேட்ஸ்மெனை கணிப்பது எப்படி போன்ற விஷயங்களை இவர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கலாம்.
நான் இவர்களுடன் வலைப்பயிற்சியில் பணியாற்றியுள்ளேன். பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் இடது கை பேட்ஸ்மென்களுக்கு புதிய பந்தை பேட்ஸ்மென்களை விட்டு விலகிச் செல்லுமாறு ஸ்விங் செய்வது அவசியம் என்றேன். உலகக் கோப்பையில் பார்த்திருப்பீர்கள் உமேஷ் யாதவ் அதன் படியே ஸ்விங் செய்தார். அதே போல் சில பந்துகளை உள்ளே கொண்டு வரவும் செய்தார்.
ஆனால், பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் வலது கை வீச்சாளர் இடது கை பேட்ஸ்மெனுக்கு பந்தை உள்ளே வருமாறு வீசினால் பேட்ஸ்மெனுக்கு அது சுலபமாகிவிடக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே ஃபிளாட் களத்தில் இடது கை வீரர்களுக்கு பந்தை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும்" இவ்வாறு கூறினார் வாசிம் அக்ரம்.