

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், தான் உமேஷ் யாதவ்வின் மிகப்பெரிய ரசிகன் என்றும் வரும் ஆண்டுகளில் உமேஷ் யாதவ் பந்துவீச்சை கூர்ந்து கவனிக்கத் தொடங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் உமேஷ் யாதவ், இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளிலும் 48 ஒருநள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் உமேஷ் யாதவ். இந்நிலையில் தன்னுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சை ஒப்பிட்டு பேசியுள்ளார் டேல் ஸ்ட்யென்.
“நான் உமேஷ் யாதவ்வின் மிகப்பெரிய ரசிகன். நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதால், வேகப்பந்து வீச்சாளர்களை எனக்குப் பிடிக்கும். உமேஷ் யாதவ்விடம் என்னைப் போன்ற ஒரு உடல் அமைப்பு உள்ளது. இருவருமே அதிக உயரம் இல்லை. இருவரும் ஒரே உயரம். ஆனால் என்னை விட அவர் வலுவானவர், வலுவான பந்துவீச்சு முறை மற்றும் ஸ்விங் அவரது பந்துகளில் அதிகம் உள்ளன.
வருடங்கள் செல்லச் செல்ல உமேஷ் யாதவ் பந்துவீச்சை அனைவரும் உற்று நோக்கத் தொடங்குவர். அவர் ஒரு நல்ல டெஸ்ட் பந்துவீச்சாளரகவும் வளர்ச்சியடைவார். நல்ல வேகத்தில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து ஸ்விங் செய்ய முடிகிறது அவரால்.
தோனி ஒரு அருமையான கேப்டன், உலகக் கோப்பை போட்டிகளின் போது நல்ல திட்டமிடுதலைச் செய்தனர். ஆஸ்திரேலியாவில் தொடக்கத்தில் சரியாக ஆடமுடியாத நிலையிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறியது பெரிய விஷயம்.
இந்திய பவுலர்கள் யார்க்கர்களையும் திறம்பட வீசுகின்றனர். ஷார்ட் பிட்ச் பந்துகளையும் நன்றாக வீசினர். ஆனால் இந்தியாவில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. ஏனெனில் மைதானங்கள் சிறியவை, பிட்ச்கள் மட்டையாளர்களுக்கு சாதகமாகவே பெரும்பாலும் அமையும்.
இஷாந்த் சர்மா காயங்களினால் அவதியுற்றார். அவர் காயமில்லாமல் இருந்தார் அவர் ஒரு விசித்திரமான பவுலர். அவர் கிரிக்கெட் பந்தைக் கொண்டு சில நம்பமுடியாத விஷயங்களைச் செய்யக் கூடியவர். இவரிடம் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான அனைத்து குணாம்சங்களும் உள்ளன.
இஷாந்த் சர்மா கிரிக்கெட் களத்தில் கொஞ்சம் நேரம் அதிகம் செலவிட வேண்டும். கிரிக்கெட்டில் இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதில்லை. சிலர் காயமடைகின்றனர். ஆனால் இஷாந்த் களத்தில் இருந்தால் அவரிடமிருந்து சிறப்பான பந்து வீச்சை எதிர்பார்க்கலாம்.
எனக்கு 32 வயதாகிறது. வயது என்பது வெறும் எண்தான். நான் ஒவ்வொரு ஐபில் தொடரிலும் ஆடியுள்ளேன்.
ஒவ்வொரு முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போதெல்லாம் இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறேன்.
வினய் குமார், இவர் இந்திய அணிகாக பெரும் அளவில் பங்களிப்பு செய்ய விருப்பம் உடையவர். புவனேஷ் குமார் கடந்த ஆண்டு சிறந்த வீச்சாளர் விருதை ஏறக்குறைய பெற்றிருப்பார். ஆனால், இவர்களுடன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது”
இவ்வாறு கூறினார் டேல் ஸ்ட்யென்.