

ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் சார்லஸ்டான் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கெர்பர் 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸைத் தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய கெர்பர், “மிகச்சிறப்பான வெற்றியை பெற்றிருப்பதாக உணர்கிறேன். மேடிசன் ஒரு சிறந்த வீராங்கனை. இறுதி ஆட்டத்தில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். இந்த ஆட்டத் தைப் பொறுத்தவரை நாங்கள் இருவருமே சாம்பியன்கள் என நினைக்கிறேன்” என்றார்.
கெர்பர் வென்ற 4-வது டபிள்யூடிஏ பட்டம் இது. முன்னதாக சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த கெர்பர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுமாறினார். ஆஸ்திரேலிய ஓபன், அன்ட்வெர்ப், தோஹா, இண்டியன்வெல்ஸ் ஆகிய போட்டிகளில் முதல் சுற்றோடு வெளியேறியதால் தரவரிசையில் முதல் 10 இடங்களை இழந்தார். எனினும் இப்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியிருப்பதன் மூலம் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜேக் சாக் சாம்பியன் ஆனார். அவர் தனது இறுதிச்சுற்றில் 7-6 (9), 7-6 (2) என்ற நேர் செட்களில் சகநாட்டவரும், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்தவருமான சாம் கியூரியைத் தோற்கடித்தார். ஜேக் சாக் வென்ற முதல் ஏடிபி பட்டம் இதுவாகும். -ஏஎப்பி.