

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யிடம் தோல்வி கண்டது ஏமாற்ற மளிப்பதாக மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிரண் போலார்ட் தெரிவித்தார்.
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வி கண்டது மும்பை இண்டியன்ஸ். இந்த ஆட்டத்தில் மும்பை தரப்பில் கிரண் போலார்ட் 34 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்தபோதும் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரண் போலார்ட் கூறியதாவது: இந்தத் தோல்வியால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். நாங்கள் இந்த ஆட்டத்தை சிறப்பான முறையில் தொடங்கவில்லை.
எனினும் நானும், ஆண்டர்சனும் ரன் குவித்தோம். ஆனால் அது போதுமான ஸ்கோராக இல்லை. பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் முன்னேற்றம் அவசியம் என்றார்.
தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் மும்பை தோல்வி கண்டிருப்பதால், வரும் போட்டிகளில் அந்த அணியின் ஆட்ட உத்தியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என கேட்டபோது,
“அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கவுள்ளோம். அந்த அணி தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வரும் அணியாகும். எனவே அடுத்த போட்டியில் ஆட்ட உத்தியில் மாற்றம் செய்வது அவசியம்” என்றார்.