Published : 24 Apr 2015 09:50 AM
Last Updated : 24 Apr 2015 09:50 AM

ராஜஸ்தான்- பெங்களூர் இன்று மோதல்

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தான், கடந்த ஆட்டத் தில் கடுமையான போராட்டத்துக் குப் பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாபிடம் தோற்றது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ள ராஜஸ்தான், பெங்களூர் அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பெங்களூர் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளை யாடி 3-ல் தோல்வி கண்டுள்ளது. தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கோலி தலைமையிலான பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பெங்களூர் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக இருந்தபோதிலும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், விராட் கோலி, ரிலீ ரொசாவ் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ், கோலி ஓரளவு சிறப்பாக ஆடியபோதும், கெயில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அவர் நீக்கப்பட்டார்.

கடந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த ரொசாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோலி, டிவில்லியர்ஸ், டேவிட் வியெஸ் உள்ளிட்டோர் எப்படி ஆடுகி றார்கள் என்பதைப் பொறுத்தே பெங்களூரின் ரன் குவிப்பு அமையும்.

இதேபோல் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க் பெங்களூர் அணிக்கு திரும்பிவிட்டபோதிலும், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெங்களூர் பவுலர்களால் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. மில்னிக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த நாத் அரவிந்த் இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிக வலுவாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட முன்னணி அணிகளைத் தோற்கடித்துள்ள ராஜஸ்தான் அணிக்கு அஜிங்க்ய ரஹானே, கேப்டன் வாட்சன் ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித், கருண் நாயர், தீபக் ஹூடா, ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர் கூட்டணி பலம் சேர்க்கிறது.

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து கலக்கி வருகிறார். பெங்களூர் பேட்ஸ்மேன் களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. மோரிஸ் தவிர, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி, வாட்சன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பே, அங்கித் சர்மா, தீபக் ஹூடா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 7 முறையும், பெங்களூர் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x