Last Updated : 28 Mar, 2015 10:18 AM

 

Published : 28 Mar 2015 10:18 AM
Last Updated : 28 Mar 2015 10:18 AM

ஏமாற்றிய வீரர்கள்; எல்லை மீறிய ரசிகர்கள்

பெரும் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா இவ்வளவு மோசமாக தோற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். காரணம், அரையிறுதிக்கு முன்பு வரை இந்தியா தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்றிருந்ததுதான்.

விளையாட்டில் வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், ஓரளவுக்குப் போராடி தோற்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்திய அணியோ, ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்கவில்லை. பொறுப்பில்லாமல் விளையாடி தோற்றது என்பதுதான் உண்மை. அதுதான் இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் இந்திய வீரர்கள் மீது வசைபாட வைத்திருக்கிறது.

கோலி தேர்வு செய்த மோசமான ஷாட், அவருடைய காதலி அனுஷ்கா சர்மாவை இன்று வெளியில் தலைகாட்ட முடியாத பரிதாபத்துக்கு தள்ளியிருக்கிறது. இந்திய அணி முக்கிய ஆட்டங்களில் சொதப்புவது இது முதல்முறையல்ல என்றாலும், ரசிகர்கள் இப்போது மிகஅதிகமாக வசைபாடுவதற்கு காரணம், அவர்கள் தோனியின் இளம்படை மீது வைத்திருந்த அதீத நம்பிக்கைதான். தோல்விக்கு பல காரணங்களை இந்திய வீரர்கள் கூறினாலும், அவர்கள் பொறுப்புணர்வுடன் விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது.

தென் ஆப்பிரிக்காவின் நாட்டுப் பற்று

நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எவ்வளவு பொறுப்புணர்வோடும், நாட்டுப் பற்றோடும் விளையாடினார்கள், எந்தளவுக்கு உயிரைக் கொடுத்து விளையாடினார்கள் என்பது அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரியும்.

நியூஸி. கேப்டன் மெக்கல்லம் ஆரம்பத்தில் ஆடிய வேகத்தைப் பார்த்தபோது உலகின் எந்த அணியும் சோர்ந்து போயிருக்கும். ஆனால் அப்படியொரு நெருக்கடியிலும்கூட தென் ஆப்பிரிக்கா வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை.

ஏறக்குறைய 32 வயதை நெருங்கிவிட்ட டேல் ஸ்டெயின் கடைசி நேரத்தில் பாய்ந்து சென்று பவுண்டரியை தடுத்தது மயிர்கூச்செரிய வைத்தது. இந்த கேட்ச்சை பிடிக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அற்புதமாக ஆண்டர்சன் கேட்ச்சை பிடித்தார் டூ பிளெஸ்ஸி. அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் அர்ப்பணிப்போடு விளையாடினார்கள்.

தங்கள் அணி கோப்பையை வெல்லாதா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் கனவை நனவாக்க கடைசி வரை போராடினார்கள். தென் ஆப்பிரிக்க வீரர்கள் செய்த ஒரு சில தவறுகளை தவிர வேறு எந்த குறையும் சொல்ல முடியாது.

அந்தத் தவறுகள்கூட நெருக்கடி மற்றும் பதற்றம் காரணமாக நிகழ்ந்ததுதானே ஒழிய, பொறுப்பில்லாமல் ஆடி தவறிழைக்கவில்லை. தோல்வியைத் தாங்க முடியாமல் அவர்கள் அழுத காட்சிகளே அவர்கள் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கான சாட்சி.

ரசிகர்களின் பிரச்சினை

ஆனால் இந்திய அணியின் ஆட்டம் அப்படியிருந்ததா? நிச்சயம் இல்லை. அதேநேரத்தில் அரையிறுதியில் மோச மாக விளையாடியது உண்மைதான் என்றாலும், தோற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்திய அணி விளையாடவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றி பெறும்போது வானுயர தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோல்வியடையும் தூக்கியெறிவதும்தான் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் ஒரே பிரச்சினை.

இன்று நாம் புழுதி வாரித்தூற்றும் கோலிதான், பல போட்டிகளில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்திருக்கிறார், கடந்த உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல கணிசமான பங்களிப்பை தந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது.

கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததற்கு அவருடைய காதலி அனுஷ்கா சர்மா மீது குற்றம்சாட்டுவது எந்த வகையில் நியாயம்? இந்தியாவின் தோல்விக்கு கோலி மட்டுமா காரணம்? 11 வீரர்கள் ஆடும் கிரிக்கெட்டில் ஒருவரை மட்டும் பலிகடாவாக்குவது சரியான முடிவல்ல.

உணர்வுகளை மதிக்க வேண்டும்

“மற்ற வீரர்களின் குடும்பத்தினரைப் போலவே அனுஷ்கா சர்மாவும் கிரிக் கெட் போட்டியை பார்க்க சிட்னி வந்திருக் கிறார். அவர் மீது பழி சுமத்துவது நியாயமல்ல” என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருப்பதை நியாயமான கருத்தாகவே பார்க்க வேண்டும். ஒரு ரசிகை என்ற அடிப்படையில் அனுஷ்காவுக்கும் போட்டியை நேரில் பார்க்க உரிமை உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

கோலி ஒரு கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி அவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. அவருக்கும் உணர்வுகள் இருக்கிறது என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வீசிய விமர்சனக் கணைகள் நிச்சயமாக கோலி, அனுஷ்கா இருவரையும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கும். தோல்வியின் பிடியிலிருக்கும் கோலி மீது ரசிகர்கள் வீசிய விமர்சனக் கணைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்றதுதான். இதிலிருந்து அவர் மீள்வதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ?

முதிர்ச்சியில்லாத கோலி

அதேநேரத்தில் கோலியின் சமீபகால செயல்பாடுகள் மெச்சும்படியில்லை. தன்னை பற்றியோ, அனுஷ்கா பற்றியோ ஊடகங்களில் செய்திகள் வந்தால் செய்தியாளர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவது உள்ளிட்ட விஷயங்கள் அவருடைய முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுகின்றன. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் ஒருவரை திட்டி சர்ச்சையில் சிக்கிய கோலியால், இன்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களை திட்ட முடியுமா?

நாட்டுக்காக விளையாடுவது என்று வந்துவிட்டால் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சச்சின் டெண்டுல்கர்கூட தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் விமர்சனங்களை சந்திக்கத்தான் செய்தார். ஆனால் அவர் ஒருபோதும் விமர்சனத்துக்கு தனது வாயால் பதில் சொன்னதில்லை.

இந்திய அணியின் வருங்கால கேப்டனான கோலி இனியாவது சிந்தித்து செயல்பட வேண்டும். ரசிகர்களின் உணர்வை புரிந்துகொண்டு இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். அதே தருணத்தில் ரசிகர்களும் வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வெற்றியையும் தோல்வியையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வீரர்கள் மீதான உளவியல் தாக்குதலோ, அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதலோ சரியான முடிவல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டிய தருணம் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x