Published : 21 Mar 2015 06:14 PM
Last Updated : 21 Mar 2015 06:14 PM

ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விகள் இந்திய அணியை அச்சுறுத்தும்: ஸ்டீவ் வாஹ்

உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி, ஆஸி.யிடம் சமீபத்தில் பெற்ற தோல்விகளின் அச்சுறுத்தலை நினைவில் கொண்டிருக்கும் என்று ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் பல ஆலோசகர்களில் ஒருவராக இணைந்துள்ள ஸ்டீவ் வாஹ் இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் கூறியதாவது:

"ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவது இந்திய அணிக்கு மனரீதியாக கடுமையாக இருக்கும். கடந்த 2 மாதங்களாக இந்திய அணியை ஆஸ்திரேலியா சீரான முறையில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்விகளை இந்திய அணி மறந்திருக்க மாட்டார்கள்.

இதனைக் கூறும் போதே இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. நன்றாக விளையாடி வருகின்றனர். அந்த அணியின் பேட்டிங் எந்த இலக்கையும் துரத்தும் திறன் கொண்டது. உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிவருகின்றனர், நல்ல தொடர் வெற்றியில் அந்த அணி இருந்து வருகிறது.

இரு அணிகளுக்குமே அச்சுறுத்தலான ஆட்டம் இது. இரு அணிகளுக்குமே நம்பிக்கை இருக்கும். ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வெற்றி பெற முடியாது.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி நல்ல வெற்றிதான், ஆனாலும் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது. இன்னும் ஆஸ்திரேலியாவின் சிறப்பான திறமை வெளிவரவில்லை. இது ஒருவிதத்தில் நல்லது, அதாவது இன்னும் முன்னேற்றம் தேவை என்ற நிலையில் இது நல்ல விஷயம்.

பயிற்சியில் அணியினருடன் இருக்கிறேன், உண்மையான ஆட்டச்சூழலை பிரதிபலிக்கும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறோம். பெரிய வாய்ப்புக்கு அணி தயாராகவே உள்ளது" இவ்வாறு கூறினார் ஸ்டீவ் வாஹ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x