Published : 30 Mar 2015 11:05 AM
Last Updated : 30 Mar 2015 11:05 AM

கோப்பையோடு விடைபெற்ற கிளார்க்; எண்கள் சொல்லும் சிறப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கையோடு பிரியா விடை பெற்றிருக்கிறார் அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5-வது முறையாக மகுடம் சூடியது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தாங்கள் ஜாம்பவான்கள் என்பதை மீண்டுமொருமுறை ஆஸ்திரேலிய வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

கடந்த 1987-ல் முதன் முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா, 1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்று முறை சாம்பியனாகி வெல்லவே முடியாத அணி என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. 2011-ம் ஆண்டு இந்தியாவிடம் தோற்று கோப்பையைக் கைநழுவ விட்டபின், இம்முறை மீண்டும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கையோடு பிரியா விடை பெற்றிருக்கிறார் அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

2003-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான கிளார்க், பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்தார். 2007 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கியப் பங்கு வகித்த கிளார்க், ரிக்கி பாண்டிங்கிற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் மிகுந்த உத்வேகமுடைய கேப்டன் என்றழைக்கப்படும் மைக்கேல் கிளார்க், உடற்தகுதி பிரச்சினை, சகவீரர்களுடன் பிரச்சினை என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை சந்தித்தபோதும், அதை ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.

எப்போதுமே புன்னகை பூத்த முகத்துக்கு சொந்தக்காரரான கிளார்க், தனது கடைசி ஆட்டத்தில் அபாரமாக ஆடி 72 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து அசத்தலான ஓர் இன்னிங்ஸை கொடுத்திருக்கிறார்.

அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது மைதானத்தில் இருந்த சுமார் 93 ஆயிரம் ரசிகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரியா விடை கொடுத்தனர்.

எத்தனையோ ஜாம்பவான்கள் கிரிக்கெட்டில் வந்து போயிருக் கலாம். ஆனால் கிளார்க்கிற்கு கிடைத்தது போன்றதொரு பிரியா விடை, மற்றவர்களுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இதுவரை 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 8 சதங்களுடன் 7,981 ரன்களைக் குவித்துள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற கையோடு ஓய்வு பெற்றுள்ள 2-வது கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆவார். இதற்கு முன்னர் 1992-ல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றபோது அப்போதைய கேப்டன் இம்ரான் கான் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹியூஸுக்கு அர்ப்பணம்

உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த எனது இளைய சகோதரர் பிலிப் ஹியூஸுக்கு இந்த உலகக் கோப்பை வெற்றியை அர்ப்பணிக்கிறேன். பிலிப் ஹியூஸ் வெற்றியை மிக பிரம்மாண்டமாக கொண்டாடும் வழக்கம் கொண்டவர். அதனால் உலகக் கோப்பை வெற்றியை இன்று இரவு (நேற்று இரவு) மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப் போகிறோம் என்பதற்கு நான் உத்தரவாதம் என்றார்.

தனது நெருங்கிய நண்பரான பிலிப் ஹியூஸ் நினைவாக கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் கிளார்க், "நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வரை இந்த பட்டையை அணிந்து விளையாடுவேன். ஹியூஸ் இறந்தது முதல் அடுத்த சில மாதங்கள் வரையிலான நாட்கள் கடினமான தருணம்" என்றார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பிலிப் ஹியூஸ், பவுன்சர் தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27-ம் தேதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர் நாயகன் மிட்செல் ஸ்டார்க்

இந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றுள்ளார். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னர் ஜான்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் உலகக் கோப்பை தொடங்கிய பின்னர் அதை மாற்றினார் ஸ்டார்க். 8 ஆட்டங்களில் விளையாடிய அவர் தனது துல்லியமான யார்க்கரால் எதிரணிகளை திக்குமுக்காட வைத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலி டத்தைப் பிடித்தார். மிட்செல் ஸ்டார்க் வீழ்த்திய விக்கெட்டுகளில் 55 சதவீதம் போல்டு மூலம் கிடைத்தவையாகும்.

எந்த வருத்தமும் இல்லை: மெக்கல்லம்

கனவுகளோடு களமிறங்கிய நாங்கள் தொடர்ந்து சிறப்பாகவும், த்ரில்லாகவும் விளையாடி இறுதிச்சுற்று வரை முன்னேறிய பிறகு தோற்றிருக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் களமிறங்கியபோதே ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான ஆட்டத்தில் இறங்கிவிட்டது. உலக சாம்பியன் என்ற பெருமையோடு விடை பெறுவதற்கு மைக்கேல் கிளார்க் தகுதியானவர். நான் ஆட்டமிழந்த பந்து மிக வேகமாக சுழன்று வந்த பந்து. நாங்கள் திட்டமிட்டபடி எங்களால் செயல்பட முடியவில்லை. எனினும் நாங்கள் 2-வது சிறந்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம் என்றார்.

மெல்போர்னில் குவிந்த 93 ஆயிரம் ரசிகர்கள்

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தைக் காண 93 ஆயிரத்து 13 ரசிகர்கள் மெல்போர்ன் மைதானத்திற்கு வந்திருந்தனர். இதன்மூலம் அதிக ரசிகர்கள் நேரில் பார்த்த போட்டி என்ற பெருமை இந்த ஆட்டத்துக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக 2013-ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (ஆஷஸ் தொடர்) இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 91 ஆயிரத்து 112 பேர் மைதானத்திற்கு வந்ததே சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x