Published : 11 Mar 2015 05:48 PM
Last Updated : 11 Mar 2015 05:48 PM

ஸ்காட்லாந்தை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய இலங்கை, ஸ்காட்லாந்து அணியை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே தோல்வி தழுவிய இலங்கை 4 வெற்றிகளுடன் தற்போது 8 புள்ளிகள் பெற்று +0.371 என்ற நிகர ரன் விகிதத்துடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது அதில் வென்று ஆஸி. 9 புள்ளிகளுடன் 2ஆம் இடம் செல்லும் வாய்ப்புள்ளது. வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தால் அந்த அணி 9 புள்ளிகளுடன் 3ஆம் இடம் செல்லும், அப்போது இலங்கை 4ஆம் இடத்துக்கு வரும், இந்தியாவை காலிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது.

இன்று ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி சங்கக்காராவின் சாதனை ஒருநாள் சதத்துடனும், தில்ஷனின் அனாயாச சதத்துடனும் பிறகு ஆஞ்சேலோ மேத்யூஸ் சிக்சர் மழை 51 ரன்களினாலும் 9 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. 37வது ஓவரில் 244/2 என்று இருந்த இலங்கை நிச்சயம் ஒரு 400 ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு அந்த வேகத்தில் ரன்களைக் குவிக்கும் முயற்சியில் ஒரே ஓவரில் டேவியிடம் ஜெயவர்தனே (2), சங்கக்காரா (124) ஆகியோரை இழந்தது. 244/2 என்ற நிலையிலிருந்து அடுத்த 119 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. டேவி, பெரிங்டன், டெய்லர், இவான்ஸ் போன்ற ஸ்காட்லாந்து பவுலர்களின் விடா முயற்சி பாராட்டுதலுக்குரியது. மேலும் ஜோஷ் டேவி இதுவரை இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகத் திகழ்கிறார். இவர் 14 விக்கெட்டுகளுடன் இன்று வரை முதலிடம் வகிக்கிறார். நியூசி. வேகப்பந்து கூட்டணியான போல்ட், சவுதி தலா 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து 43.1 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் கேப்டன் மோம்சென் 60 ரன்களையும், கோல்மென் 70 ரன்களையும் எடுத்தனர். இருவரும் இணைந்து 44/3 என்ற நிலையிலிருந்து 162 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தி ஓரளவுக்கு மரியாதைக்குரிய ரன்னை எட்ட உதவினர்.

இலங்கை தரப்பில் குலசேகரா, சமீரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மலிங்கா 2 விக்கெட்டுகளையும் பெரேரா, தில்ஷன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் சங்கக்காரா சாதனைத் துளிகள்:

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் எடுத்து புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா. இதற்கு முன்னதாக 6 பேட்ஸ்மென்கள் தொடர்ச்சியாக 3 சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்திருக்கின்றனர்.

மேலும் ஒரு உலகக்கோப்பைத் தொடரில் 4 சதங்கள் எடுத்தும் சங்கக்காரா சாதனை புரிந்துள்ளார். மார்க் வாஹ், கங்குலி, ஹெய்டன் ஆகியோர் 3 சதங்களை உலகக்கோப்பையில் எடுத்துள்ளனர்.

மேலும், 2015ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் சங்கக்காரா 1025 ரன்களை எடுத்துள்ளார். இதில் இவர்தான் இதுவரை முதலிடம் வகிக்கிறார். 2015-இல் முதன்முதலாக 1000 ரன்களைக் கடந்தவரும் சங்கக்காராவே.

மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் சங்கக்காரா 5-வது சதத்தை இன்று எடுத்தார். இன்னும் ஒரு சதம் சங்கக்காரா அடித்தால் சச்சின் சாதனை சமன் ஆகிவிடும். ஆனால் ரிக்கி பாண்டிங்கின் 5 உலகக்கோப்பை சத சாதனை உடைக்கப்படும்.

விக்கெட் கீப்பராக சங்கக்காரா உலகக்கோப்பை போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாயிருந்துள்ளார். இவருக்கு முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட் 52 பேரை அவுட் செய்து முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா எடுத்துள்ள ரன்கள் இதுவரை 2038 ரன்களாகும். அயல்நாட்டு வீரர் ஒருவர் ஆஸி. மண்ணில் 2000 ரன்களைக் கடப்பது என்ற வகையில் 3-வது பேட்ஸ்மெனாகத் திகழ்கிறார் சங்கக்காரா. முன்னதாக விவ் ரிச்சர்ட்ஸ் 2769 ரன்களுடன் 2ஆம் இடத்திலும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3067 ரன்களுடன் முதலிடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x