

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 5 பேருக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
அந்த 5 கிரிக்கெட் வீரர்கள் விவரம் வருமாறு: வேகபந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், நடுக்கள பேட்ஸ்மென் ஃபவாத் ஆலம், துவக்க வீரர் நசீர் ஜாம்ஷெட், மற்றும் ஷாசேப் ஹசன்.
லாகூர் பயிற்சி முகாமில் இருந்த இந்த வீரர்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், ஹூஸ்டனில் விளையாடியதை ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட லெக்ஸ்பின் பவுலர் டேனிஷ் கனேரியாவும் இந்த அதிகாரபூர்வமற்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார். இது குறித்தும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் தடை விதிக்கப்பட்ட வீரர் எந்த வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கக் கூடாது என்பது ஐசிசி விதிமுறையாகும்.