Last Updated : 15 Mar, 2015 11:09 AM

 

Published : 15 Mar 2015 11:09 AM
Last Updated : 15 Mar 2015 11:09 AM

உ.பி.யில் முஸ்லிம் திருமணங்களில் மேள வாத்தியங்களுக்கு தடை

உத்தரப் பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது பரேலி மாவட்டம். இதன் நிஜ்வத் கான் நகர்ப்புறப் பகுதி மற்றும் மோஹன்பூர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 மசூதிகளின் மவுலானாக்கள் இணைந்து முஸ்லிம்களின் திருமணம் தொடர் பாக பத்வா பிறப்பித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு பிறப்பிக்கப் பட்ட அதில், அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் திருமணங் களில் மேள வாத்தியங்கள் முழங்கி ஆடல் பாடலில் ஈடுபடக் கூடாது எனவும், பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். இதை மீறினால் அவர்களது திருமணங்களை நடத்தி வைக்க எந்த மவுலானாக்களும் வர மாட்டார்கள் எனவும், திருமணம் பதிவு செய்யப்படாது எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மவுலானாக்களில் ஒருவரான முப்தி முகமது ஜமீல் கான் ‘தி இந்து’விடம் கூறும் போது, “இசையும், நடனமும் இஸ்லாத் துக்கு எதிரானது. இதை அறிந்த பின்பும், அதற்காக நிக்காஹ்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இவற்றை தவிர்க்க இந்த பத்வா அமையும் என நம்புகிறோம்” என்றார்.

உ.பி.யின் இந்து மற்றும் முஸ்லிம் திருமணத்தின்போது, மாப்பிள்ளை அழைப்பின்போது மேள வாத்தியங்கள் முழங்க அவர்களின் சொந்த, பந்தங்கள் அனைவரும் நடனமாடியபடி ஊர்வலமாக மண்டபம் வரை வருவது வழக்கம். முக்கிய இடங்களைக் கடக்கும்போது, ஏராளமான பட்டாசுகளையும் வெடித்து மகிழ்வது உண்டு. மேள வாத்தியங்களுக்காக குறைந்த பட்சம் ரூ.40,000 முதல் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த செலவைக் குறைக்கும் வகையில் மவுலானாக்கள் விதித்துள்ள பத்வாவுக்கு அப்பகுதிவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x