

ஹாமில்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா 10 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
இதுமட்டுமின்றி உலகக் கோப்பை யில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா இதுபோன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கங்குலி தலைமையிலான அணி 2003 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.
உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமை இன்றளவும் ஆஸ்திரேலியா வசமேயுள்ளது. அந்த அணி 1999 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 25 போட்டிகளில் வாகை சூடியுள்ளது.
கபில் தேவ் சாதனையை முறியடித்த தோனி
அயர்லாந்துக்கு எதிராக வெற்றி கண்டதன் மூலம் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன்கள் வரிசையில் 9 வெற்றிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்திய கேப்டன் தோனி.
முதலிடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் தலைமையில் அந்த அணி தொடர்ச்சியாக 24 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை குவித்த அணிகள் வரிசையில் 9 வெற்றிகளுடன் இந்தியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இதேபோல் உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. முன்னதாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 11 வெற்றிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
எண்கள் சொல்லும் சிறப்புகள்:
அயர்லாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையைப் பெற்றது ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி. உலகக் கோப்பையில் இந்தியாவின் தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 6-வது முறையாகும்.
நேற்று 259 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது அயர்லாந்து.
2013-லிருந்து தற்போது வரையில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 15 முறை வீழ்த்தியுள்ள ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முகமது ஷமி.
அயர்லாந்துக்கு எதிராக 31 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார் ரோஹித் சர்மா. அவர் இந்த மைல்கல்லை எட்டிய 14-வது இந்தியர் ஆவார்.
ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல்முறையாக எதிரணிகளை தொடர்ந்து 5 ஆட்டங்களில் ஆல்அவுட்டாக்கியுள்ளது இந்தியா. வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை ஆல்அவுட்டாக்கும் பட்சத்தில் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக முறை எதிரணிகளை ஆல்அவுட்டாக்கிய அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளும் இந்தியா.