

உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னால் நடைபெற்ற முத்தரப்ப்பு ஒருநாள் தொடர் காலவிரயமே என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
"முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடி இந்திய அனி மனரீதியாக களைப்பு அடைந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். எனவே வீரர்கள் தங்களை மீண்டும் புத்துணர்வு அடையச் செய்ய போதிய இடைவெளி தேவைப்பட்டது. அந்த இடைவெளிதான் அவர்கள் இன்று அனைத்து துறைகளிலும் சிறப்புற விளங்க உதவி புரிந்துள்ளது. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் முத்தரப்பு ஒரு நாள் தொடர் கால மற்றும் ஆற்றல் விரயம்தான்.
அணி சிறப்பாக ஆடி வருகிறது என்பதில் எனக்கு என்ன ஆச்சரியமிருக்கிறது? இந்த வீரர்கள் மீது எனக்கு அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் திறமைக்கு ஏற்ப ஆடவேண்டும். அதுதான் இந்த 3 போட்டிகளிலும் நடந்தது. திட்டமிட்டபடி அனைத்தும் சென்றது என்றே நான் கூறுவேன்.
எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின், விவிஎஸ் லஷ்மணை மனதில் கொண்டு பார்த்து அவர்களை விடுத்துப் பார்த்தால் விராட் கோலி அளவுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக ஆடிய பேட்ஸ்மெனை நான் பார்த்ததில்லை. சச்சின், லஷ்மண் அசாத்தியமாக ஆடினர். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 சதங்களை அடித்த ஒரு இந்திய பேட்ஸ்மெனை எனக்குக் கூறுங்கள். கோலி அபாரமான பேட்ஸ்மென், அவர் ஆதிக்கம் செலுத்தினார். அதனால்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நாம் அவர்களுக்கு சரியான சவாலை அளிக்க முடிந்தது.
இந்த இந்திய அணி, பீல்டிங்கில் சிறந்த அணி என்பதே என் கருத்து. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இவர்கள் அளவுக்கு உடற்கூறு அளவிலும் சரியான நிலையில் உள்ளனர்." என்றார் ரவி சாஸ்திரி.