

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான் கேல் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 3 நாள் பயிற்சி முகாமை நெதர்லாந்து அணி புதன்கிழமை தொடங்கியது. அங்கிருந்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். அந்தப் பதவிக்கு நான் ஒருநாள் வருவேன் என நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய கிளப் மான்செஸ்டர்” என்றார்.
அலெக்ஸ் பெர்குசன் பயிற்சியின் கீழ் அசைக்க முடியாத அணியாக இருந்தது மான்செஸ்டர் யுனைடெட். அவரின் ஓய்வுக்குப் பிறகு டேவிட் மோய்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மோய்ஸ் பயிற்சியின் கீழ் தடுமாறிய மான்செஸ்டர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெறவில்லை. இதையடுத்து டேவிட் மோய்ஸை நீக்கிய அணி நிர்வாகம், ரியான் கிக்ஸை இடைக்கால பயிற்சியாளராக நியமித்தது.
இந்த நிலையில் புதிய பயிற்சி யாளரை நியமிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது மான்செஸ்டர். அதன் புதிய பயிற்சியாளராக லூயிஸ் வான் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லூயிஸ் வான் மான்செஸ்டர் பயிற்சியாளராக அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் என பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.