

சவால்களைச் சந்திக்கும் வீரர்களைத் தனக்கு பிடிக்கும் என்று கூறிய தோனி, அவ்வகையில் அஸ்வின், ஷிகர் தவன் ஆகியோரை பாராட்டித் தள்ளியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிராக சாதனை வெற்றியை நிகழ்த்திய தோனி பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையில் சிறப்பாக வீசி வருகின்றனர். அஸ்வினைப் பொறுத்தவரையில் அவரைப்போன்ற ஒருவரை அணியில் வைத்திருக்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் அவரை நான் பவர் ப்ளேயில் பந்துவீச அழைக்கிறேன். மேலும் கடினமான சூழ்நிலையில் நான் எப்போதும் அஸ்வினையே பந்து வீச அழைக்கிறேன். அவருக்கு அவருடைய பந்துவீச்சு மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் தனது பந்துவீச்சை நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். (அஸ்வின் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்.)
கடந்த சில அயல்நாட்டுத் தொடர்களில் அவர் நிறைய கற்றுகொண்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் தொடர்களில் சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ப அவர் தன்னை மேம்படுத்தி வந்துள்ளார்.
ஷிகர் தவனின் ஆட்டம் பற்றி...
வீரர்களை ஆதரிப்பது முக்கியம். எங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இதனைச் செய்கிறோம்.அவருக்கு இது கடினமான தொடர் என்ற போதிலும் நாங்கள் தவன் மீது நிறைய முனைப்புகளை இட்டுள்ளோம். இவரது ஆட்டம் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியை நாம் வென்றிருக்க முடியாது என்பதையும் நாம் மறக்கலாகாது. எனவே, அவரை நாங்கள் எப்பவும் நம்புகிறோம்.
ஆனாலும் ஒரு தனிவீரராக அவர்தான் முயற்சிகள் எடுக்க வேண்டும். ஆனால் இந்த ஒருநாள் போட்டிகளுக்கு தவன் தன்னை நன்றாகத் தயார் செய்துகொண்டுள்ளார் என்றே நான் நம்புகிறேன்.
அவர் முதலில் 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த 15 நிமிடங்கள் அனைத்தையும் மாற்றி விடும். அவர் அந்த 15 நிமிடங்களை நன்றாகப் பயன்படுத்தி வருகிறார் என்றே நான் கருதுகிறேன். இன்னிங்சில் சில சமயங்களில் ரன்கள் எடுக்க கடினமாகிவிடும். நல்ல பந்துகள் வந்து விழும் போது ரன்கள் கடினம், ஆனால் அவர் உத்திகளில் சரியாக இருப்பது அவசியம்.
ஆனால்..அவரது பேட்டிங்கில் ஒன்றை நான் கவனித்துள்ளேன், நன்றாகத் தொடங்கி விட்டார் என்றால் அவர் பெரிய ரன்களை எடுக்கிறார். முதல் போட்டியிலிருந்தே அவர் அதைத்தான் செய்து வருகிறார். (ஷிகர் தவன் 5 போட்டிகளில் 333 ரன்கள். சங்கக்காராவுக்கு அடுத்த படியாக உள்ளார்.) தவன் 50 ரன்களுடன் மகிழ்ச்சி அடைபவர் இல்லை. மொத்தத்தில் அவரது முன்னேற்றம் அணிக்கும் அவருக்கும் நல்லது செய்துள்ளது.” என்று கூறிய தோனி அணியின் பீல்டிங்கை பெரிதும் பாராட்டினார்.