

வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், நியூஸிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
49-வது ஓவர் வரை பரபரப்பாக நீண்ட இந்த ஆட்டத்தில், வங்கதேசத்தின் திறமையான பந்துவீச்சையும் மீறி நியூஸிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துவக்க வீரர்களாக கப்தில், மெக்கல்லம் களமிறங்கினர். ஷகிப் அல் ஹசன் வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்க முடியாமல் போனாலும், 3-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியோடு 16 ரன்களைச் சேர்த்தார் கப்தில்.
ஆனால் 5-வது ஓவரில் மெக்கல்லம், வில்லியம்சன் என நியூஸிலாந்து நம்பிக்கை நட்சத்திரங்கள் இருவரையும் ஷகிப் அல் ஹசன் பெவிலியனுக்கு அனுப்பினார்.
நிலமையை உணர்ந்து ஸ்கோரை நிலைபடுத்தும் வேலையில் கப்தில், டெய்லர் இணை இறங்கியது. வங்கதேசத்தின் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து வீரர்களால் தேவைக்கேற்ற ரன்களைக் கூட சேர்க்க முடியாமல் போனது.
விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடிய கப்டில் 88 பந்துகளில் சதத்தை எட்டினார். 105 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் டெய்லர் 82 பந்துகளில் அரை சதம் எட்டினார். கப்திலை தொடர்ந்து வந்த எல்லியட் பவுண்டரி சிக்ஸர்கள் என விளாசினாலும் தேவையான ரன்கள் ஒரு ஓவருக்கு 6-க்கும் அதிகமாக மாறியது.
34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த எல்லியட் 39-வது ஓவரில் ஆட்டமிழக்க, டெய்லர் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆண்டர்சன், ரோஞ்சி இருவருமே அதிரடியாக ஆட முயற்சித்தாலும், அது தேவைக்கு குறைவாகவே இருந்தது.
ஆண்டர்சன் நியூஸிலாந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் 20 ரன்கள் தேவையாயிருக்க, களமிறங்கிய வெட்டோரி, அதிரடியாக ஒரு சிக்ஸர் அடித்து பதற்றத்தை தணித்தார்.
மறுமுனையில் இருந்த சவுத்தீ, 49-வது ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் அணியை இலக்கை எட்டி வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.
முன்னதாக, டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. வங்கதேச துவக்க வீரர் இம்ருல் 2 ரன்களுக்கும், இக்பால் 13 ரன்களுக்கும் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். பின்பு சுதாரித்து ஆடிய வங்கதேசம், மஹமதுல்லா, சவும்யா சர்க்கார் இருவர் மூலமாக சீராக ரன் சேர்த்தது.
55 பந்துகளில் அரை சதம் எடுத்த சவும்யா, அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த மஹமதுல்லா 63 பந்துகளில் அரை சதம் எட்டினார். பேட்டிங் பவர்ப்ளே எடுத்த ஓவரில், ஷகிப் அல் ஹசன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரஹிமும் 15 ரன்களுக்கு வீழ்ந்தார்.
40 ஓவர்களில் 184 ரன்களை மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணிக்கு மஹமதுல்லா தனது அதிரடியான ஆட்டத்தால் நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் சபீர் ரஹ்மானும் அதிரடிக்கு ஈடுகொடுத்து தன் பங்குக்கு பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார்.
111 பந்துகளில் மஹமதுல்லா சதத்தை எட்டினார். சென்ற போட்டியில் இவர் எடுத்த சதம் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சதத்தோடு ஓயாமல் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்த வண்ணம் மஹமதுல்லா ரன் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 288 ரன்களைக் குவித்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 128 ரன்களை எடுத்தார்.