Last Updated : 17 Mar, 2015 02:50 PM

 

Published : 17 Mar 2015 02:50 PM
Last Updated : 17 Mar 2015 02:50 PM

இந்தியாவுக்கு எதிரான போட்டி ‘மிகப்பெரியது’ - ஷாகிப் அல் ஹசன்

உலகசாம்பியனான இந்திய அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டி ‘மிகப்பெரிய’ ஆட்டம் என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

"எங்கள் அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய போட்டி இது என்று கூறலாம். ஏனெனில் உலகக்கோப்பையில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம். ஆனால் இது மற்றுமொரு போட்டி என்றே புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானது.

பெரிய அளவுக்கு மெல்போர்னில் ரசிகர்கள் கூட்டம் வரும் என்பது மிக முக்கியம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடும் போது, 70,000 ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய அனுபவம் உள்ளது. ஆனால், மெல்போர்னில் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று நான் மைதானத்தில் களமிறங்கும் வரை தெரிவிக்க இயலாது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம், இந்தியாவின் டாப் 6 வீரர்கள் பற்றிய அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது. எனக்கு தெரிந்ததை என் அணியினரிடத்தில் பகிர்ந்து கொள்வேன்.

இந்திய பேட்டிங் வரிசையில் உள்ள 6 வீரர்கள் உலகின் தலைசிறந்த வீரர்களாவர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் படைத்தவர்கள்.

இவர்கள் ஜோடி சேர்ந்து பெரிய அளவில் ரன்கள் குவிப்பதைத் தடுப்பது அவசியம், இதைவிடவும் முக்கியமானது இவர்களை விரைவில் வீழ்த்துவது.

தோனி, பதற்றமடையாத ஒரு வீரர், கேப்டன். அந்த நிதானமும் அமைதியுமே அன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலக்கை வெற்றிகரமாக அவரால் துரத்த முடிந்தது.

உலகக்கோப்பை காலிறுதியில் எந்த அணியையும் எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. நாங்கள் இப்போது நன்றாக விளையாடி வருகிறோம், எங்களது தன்னம்பிக்கை உயரத்தில் உள்ளது.” என்கிறார் ஷாகிப் அல் ஹசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x