Published : 04 Mar 2015 03:03 PM
Last Updated : 04 Mar 2015 03:03 PM

பாகிஸ்தானுக்கு 2-வது வெற்றி: யு.ஏ.இ. அணியை வீழ்த்தியது

நேப்பியரில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, யு.ஏ.இ. அணியை 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அகமது ஷேஜாத் (93), ஹாரிஸ் சோஹைல் (70), மிஸ்பா (65), சோயப் மக்சூத் (45) ஆகியோரது அபார பங்களிப்பின் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. அணியில் மீண்டும் ஷைமன் அன்வர் (62) அபாரமாக விளையாடி தனது சிறப்பை வெளிப்படுத்த ஆல்ரவுண்டர் அம்ஜத் ஜாவேத் கடைசியில் அதிரடி முறையில் 40 ரன்கள் எடுக்க யு.ஏ.இ. 50 ஓவர்கள் முழுதும் ஆடி 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களையே எடுக்க முடிந்தது.

25/3 என்று தடுமாறிய யு.ஏ.இ. அணி 50 ஓவர்கள் முழுதும் ஆடி ஆல் அவுட் ஆகாமல் இருந்தது பெரிய விஷயமே. பாகிஸ்தான் தரப்பில் மொகமது இர்ஃபான் காயம் காரணமாக 3 ஓவர்களை மட்டுமே வீசியதும், பிறகு சோஹைல் கான் காயமும் யு.ஏ.இ. அணியை ஆல் அவுட் செய்ய முடியாமல் போக காரணமாக இருந்திருக்கலாம்.

டாஸ் வென்று பலமான அணியை பேட் செய்ய அழைப்பதன் பின்னணி ஆராய்ச்சிக்குரியது. ஆப்கன் அணி கூட டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததும் சில பல ஐயங்களை எழுப்புதல் நியாயமே.

தொடக்கத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் தடவு தடவென்று தடவினர். யு.ஏ.இ. அணி விட்ட கேட்ச்களினால் அவர்கள் தப்பித்தனர். அகமட் ஷேஜாத் 8 ரன்களில் இருந்த போது கவர் திசையில் கொடுத்த கேட்சை குர்ரம் கான் நழுவ விட்டார். அதற்கு அடுத்த ஓவர் நவீத் வீச பெர்ங்கர் பாயிண்டில் ஷேஜாத் கொடுத்த கேட்சைக் கோட்டைவிட்டார். இது முன்னதைவிட எளிதான கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஓவர்களை நவீத் மற்றும் குருகே அபாரமாக வீசினர். ஷேஜாத் சரியாக ஆடவில்லை, ஷாட்களை டைம் செய்ய முடியவில்லை, எட்ஜ்கள் செய்தார். மொகமது நவீதும் அபாரமாக வீசினார்.

நசீர் ஜாம்ஷெட் 4 ரன்களில் குருகேவிடம் வீழ்ந்தார். அதன் பிறகு ஷேஜாத், ஹாரிஸ் சோஹைல் இணைந்து ஸ்கோரை 170 ரன்களுக்கு உயர்த்தினர். சோஹைல் 83 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து மொகமது நவீத் பந்தில் ஆட்டமிழந்தார். 33 ஓவர்களில் பாக். 170/2 என்று இருந்தது.

பேட்டிங் பவர் பிளே முன்னமேயே எடுக்கப்பட்டுவிட்டது. இதில் ஹாரிஸ் சோஹைல், மற்றும் ஷேஜாத் ஆட்டமிழந்தனர். ஷேஜாத் 105 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து ஷைமன் அன்வரின் ஃபைன்லெக் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். டைவ் அடித்தும் பேட் கிரீசில் இல்லை.

மக்சூத், மிஸ்பா சாதுரியத்துடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். மக்சூத் 39-வது ஓவரில் அம்ஜத் ஜாவேதை 3 பவுண்டரிகள் அடித்தார். கிருஷ்ண சந்திரன் ஓவரில் மிட்விக்கெட், லாங் ஆனுக்கு இடையில் சில பல ஷாட்கள் செல்ல 17 ரன்கள் வந்தது. இருவரும் இணைந்து 53 பந்துகளில் 75 ரன்கள் விளாசினர். 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசிய மக்சூத் 43-வது ஓவரின் கடைசி பந்தில் குருகேவிடம் ஆட்டமிழந்தார். உமர் அக்மல் களமிறங்க மிஸ்பா தன் அதிரடியை தொடர அடுத்த 33 பந்துகளில் 61 ரன்கள் விளாசப்பட்டது. உமர் அக்மல் குருகேவிடம் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 19 ரன்கள். அப்ரீடி களமிறங்கி 2 ஆஃப் திசை சிக்சர்களுடன் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். வஹாப் ரியாஸ் ஒரு அற்புதமான சிக்சரை லாங் ஆனில் அடித்தார். மிஸ்பா 49 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து குருகே பந்தில் அவுட் ஆனார். பாகிஸ்தான் 339/6 என்ற ஸ்கோரை எட்டியது.

யு.ஏ.இ. தரப்பில் குருகே 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. அணி ஆட்டத்தின் எந்த நிலையிலும் பாகிஸ்தான் பந்து வீச்சை அச்சுறுத்தவில்லை. 10-வது ஓவரில் 25/3 என்று ஆனது. குர்ரம் கான் 43 ரன்களை எடுக்க, மீண்டும் ஷைமன் அன்வர் மட்டும் தான் வேறு ஒரு மட்டத்தைச் சேர்ந்த ஆட்டக்காரர் என்பதை நிரூபிக்கும் விதமாக 88 பந்துகளில் 4 பவுண்ட்ரி 2 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 62 ரன்களை எடுத்தார். விக்கெட் கீப்பர் பாட்டீல் 36 ரன்கள் எடுத்தார். கடைசியில் அம்ஜத் ஜாவேத் இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு விருந்து. 33 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 40 ரன்கள் எடுத்தார்.

பாக். அணியில் சொஹைல் கான், வஹாப் ரியாஸ், அப்ரீடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அகமது ஷேஜாத் தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் தற்போது பிரிவு பி-யில் 2 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. நிகர ரன் விகித அடிப்படையில் மே.இ.தீவுகள் 3ஆம் இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x