

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவது என முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியோடு குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெறுவது என முடிவெடுத்துள்ளேன். ரியோ ஒலிம்பிக் போட்டியே எனது கடைசி போட்டி. அதன்பிறகு எந்தப் போட்டியிலும் பங்கேற்கமாட்டேன். எனது 3-வது குழந்தைக்கு 2 வயதாகிவிட்டது.
எனவே ஒலிம்பிக் வரை விளையாடுவதே போதுமானது என நினைக்கிறேன். ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டு மக்களை மகிழ்விக்க வேண்டும் என விரும்புகிறேன். தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஓய்வுக்குப் பிறகு எனது குத்துச்சண்டை அகாடமியில் தீவிர கவனம் செலுத்தவுள்ளேன். எனது முழு நேரத்தையும் அகாடமிக்காக செலவிடுவேன். என்னைப் போன்று நிறைய வீராங்கனைகளையும், நிறைய உலக சாம்பியன்களையும் உருவாக்க விரும்புகிறேன். சமூக பிரச்சினைகளுக்கும் ஆதரவாக இருப்பேன்” என்றார்.