

சென்னையில் இன்று நடைபெறவுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தேர்தலில், அதன் தலைவராக, ஜக்மோகன் டால்மியா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் முறைகேடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் மீண்டும் போட்டியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இதனால், அவர் தனது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியாவைக் களமிறக்கியுள்ளார்.
பிசிசிஐ தேர்தல் மற்றும் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற வுள்ளது. இதில், ஜக்மோகன் டால்மியா ஒருமனதாக தலை வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார் டால்மியா. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகார் வெடித்தபோது, தலைவராக இருந்த சீனிவாசன், டால்மியாவைத் தற்காலிகத் தலைவராக முன்னிறுத்தினார். தற்போது சீனிவாசன் பிசிசிஐ நிர்வாகத்தில் எந்தவொரு பதவிக்கும் போட்டியிட முடியாது. அவர் வாக்களிக்க மட்டுமே முடியும்.
சரத் பவாருக்கு வாய்ப்பில்லை
பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசனின் ஆதரவு பெற்ற டால்மியாவை எதிர்த்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவார் களமிறங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், சரத் பவாரை கிழக்கு மண்டலத்திலிருந்து யாரும் முன்மொழியவில்லை. இதனால், டால்மியா தலைவராகத் தேர்ந் தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
டால்மியாவுக்கு கிழக்கு மண்டலத்திலிருந்து 2 வாக்குகள் கைவசம் உள்ளன. அந்த மண்டலத்தைச் சேர்ந்த 6 மாநில கிரிக்கெட் சங்கங்களும் சீனிவாசன் தரப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.
செயலாளர் பதவி
சஞ்சய் படேல் செயலாளராகத் தொடர்வார் என கருதப்படுகிறது. இப்பதவிக்கு இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க தலைவர் தாகுர் போட்டியிடுகிறார். இவர், பவார் தரப்பு ஆதரவாளர் ஆவார்.
இணைச் செயலாளர் பதவிக்கு, சீனிவாசன் தரப்பிலிருந்து கோவா கிரிக்கெட் சங்கத் தலைவர் சேத்தன் தேசாய், பிஹாரின் அமிதாபா சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஹரியாணாவின் அனிருத் சவுத்ரி பொருளாளராக போட்டியிடுகிறார்.
துணைத் தலைவர் பதவிக்கு, சீனிவாசன் தரப்பிலிருந்து சி.கே. கன்னா (வடக்கு), கங்கராஜு (தெற்கு), கவுதம் ராய் (கிழக்கு), மேத்யூஸ் (மேற்கு) ஆகியோர் போட்டியிடுகின்றனர். மத்திய மண்டல வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படவில்லை. தேர்தலை யொட்டி, சரத் பவார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிசிசிஐ முன்னாள் தலைவர் ஷசாங் மனோகர் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.
ஆண்டு பொதுக்குழு கூட்டம் முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால், தாமதமாக இன்று நடைபெறுகிறது.