

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 ஆட்டங் களிலும் வெற்றி கண்டு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, 2007 உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் கண்ட அதிர்ச்சி தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும்.
இந்திய அணிக்கு அதிக வெற்றி வாய்ப் பிருப்பதாக கருதப்பட்டாலும், வங்கதேச அணியையையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. லீக் சுற்றில் பலம் வாய்ந்த பந்துவீச்சைக் கொண்ட நியூஸி லாந்துக்கு எதிராக 250 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி வங்கதேசம்தான்.
பலம் வாய்ந்த பேட்டிங்
இந்திய அணியில் ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்க வில்லை. எனவே அவர் சிறப்பாக விளை யாடுவது அவசியம். பின்வரிசையில் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ரெய்னா 110 ரன் களும், தோனி 85 ரன்களும் குவித்தனர். அவர்களின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டும் சமி
பந்துவீச்சில் முகமது சமி, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா கூட்டணி பலம் சேர்க்கிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் எதிரணிகளை ஆல்அவுட்டாக்கியிருப்பது கூடுதல் பலமாகும். சமி இதுவரை 15 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளையும், அஸ்வின் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். மொத்தத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
பலம் சேர்க்கும் மகமதுல்லா
வங்கதேச அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் மகமதுல்லா, ஷகிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மான் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் மகமதுல்லா 344 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார். இதேபோல் தொடக்க வீரர் தமிம் இக்பால் இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக அல்ஹசன் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அந்த அணியின் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படியில்லை. ரூபெல் ஹுசைன், டாஸ்கின் அஹமது, மோர்ட்டஸா ஆகியோரால் எதிரணிகளுக்கு பெரிய அளவுக்கு சவால் அளிக்க முடியாதது பலவீனமாகும்.