தேம்பி தேம்பி அழுத தென் ஆப்பிரிக்க வீரர்கள்

தேம்பி தேம்பி அழுத தென் ஆப்பிரிக்க வீரர்கள்
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து.

ஸ்டெயின் வீசிய கடைசி ஓவரில் எல்லியட் சிக்ஸரை விளாச, தோல்வியைத் தாங்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் அப்படியே மைதானத்தில் சரிந்தனர்.

ஸ்டெயின் அப்படியே தலையை குனிந்தபடி மண்டியிட்டு அமர்ந்தார். மோர்ன் மோர்கல் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டார். கேப்டன் டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸி என அனைத்து வீரர்களும் அழத் தொடங்கினர்.

ஆடும் லெவனில் இடம்பெறாத மற்ற சகவீரர்கள் வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். எனினும் உணர்ச்சியை அடக்க முடியாத அவர்கள் தேம்பி தேம்பி அழுதபடியே மைதானத்திலிருந்து வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்க அணி, ஆண்டு முழுக்க அசத்தலாக ஆடினாலும் உலகக் கோப்பையில் மட்டும் அவர்களை துரதிர்ஷ்டம் துரத்தி விடுகிறது. அதற்கு இந்த முறையும் விதிவிலக்கு அல்ல. தென் ஆப்பிரிக்க அணி பல ரன்-அவுட்களை கோட்டை விட்டதும் தோல்விக்கு காரணமானது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கர்

தென் ஆப்பிரிக்கா நியூஸிலாந்திடம் தோற்றிருந்தாலும், அதன் தோல்விக்கு முக்கியக் காரணமானவர் மற்றொரு தென் ஆப்பிரிக்கர்தான். அவர் வேறு யாருமல்ல, கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடித்தந்த கிரான்ட் எல்லியட்தான். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த எல்லியட், கல்லூரி படிப்பை முடித்த பிறகு நியூஸிலாந்துக்கு இடம்பெயர்ந்து நியூஸிலாந்து அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்வின் சிறந்த தருணம்: மெக்கல்லம்

அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்த நேரம் எங்கள் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம். இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களுமே இந்த போட்டியை தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். இந்தப் போட்டி யால் கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது. -பிரென்டன் மெக்கல்லம், நியூஸி. கேப்டன்

எந்த வருத்தமும் இல்லை: டிவில்லியர்ஸ்

கிரிக்கெட் விளையாட்டில் இன்றைய ஆட்டம் வியக்கத்தக்க தாகும். சிறந்த அணி வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு உயிரைக் கொடுத்து விளையாடினோம். அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. -ஏ.பி.டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க கேப்டன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in