

கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் மறைந்த ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் தனது அறிமுகப் போட்டியில் பயன்படுத்திய பேட் ஏலம் விடப்படுகிறது. இது ரூ.86 லட்சத்துக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராட்மேன் மறைந்துவிட்டாலும் டெஸ்ட் பேட்டிங் சராசரியில் (99.94) இன்றளவிலும் அவர்தான் முதலிடத்தில் உள்ளார். அவர் 1928-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானபோது பயன்படுத்திய தனது பேட்டை, குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக 1930-ல் சிட்னி சன் பத்திரிகைக்கு அளித்தார். அந்த பேட்டை வைத்திருந்தவர் 2008-ல் ரூ.81 லட்சத்துக்கு விற்பனை செய்தார். இந்த நிலையில் அந்தப் பேட் மீண்டும் ஏலம் விடுவதற்காக தேசிய விளையாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.