Published : 08 Mar 2015 12:31 pm

Updated : 08 Mar 2015 12:34 pm

 

Published : 08 Mar 2015 12:31 PM
Last Updated : 08 Mar 2015 12:34 PM

விவாதம்: அடையாளத்தைத் தொலைக்காதவர்கள் அனைவரும் நல்ல பெண்களே!

ஒரு பெண் நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று எடுத்ததற்கு எல்லாம் குற்றம் சுமத்துகிற இந்தச் சமூகம் நல்ல பெண் என்பதற்காக வைத்திருக்கும் வரையறை என்ன என்பதை மார்ச் 1 தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். அதற்கு நம் வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துக் குவியலில் சில உங்கள் பார்வைக்கு…

பெண்களின் அன்றாடச் செயல்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் ‘கெட்ட்’ பெண்கள் என்று சொல்வது அவர்களைச் சிறு வட்டத்துக்குள் அடக்க நினைக்கும் செயல். பெண்களின் அளப்பரிய ஆற்றலை ஒடுக்க நினைப்பது, பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் முட்டாள்தனம்தான். பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதற்கு யோசிக்கும் இந்தச் சமூகம் பெண்களை அடக்கியாளத்தானே நினைக்கிறது? முதலில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படட்டும். அதற்குப் பிறகு யார் ‘கெட்ட்’ பெண்கள் என்பதை முடிவு செய்யலாம்.


- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

பெண்கள் சிகரங்களைத் தொட்டுவிட்ட பிறகும் நம் சமூகம் நல்ல பெண்ணுக்கென்று அளவுகோல் வைத்திருப்பது பரிதாபம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை எல்லாம் ஆணுக்குத் தேவையில்லையா? நற்குணங்களும், பண்புகளும் இருபாலாருக்கும் பொதுவானவைதானே? இதில் என்ன கொடுமை என்றால் பெண்ணுக்கான கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் வலியுறுத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை முதலில் மாற வேண்டும்.

எஸ். ராஜம், சேலம்.

ண்களிடம் சிரித்துப் பேசினால், இரவு தாமதமாக வீட்டுக்குத் திரும்பினால் என்று கெட்ட பெண்ணுக்கு இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறது இந்தச் சமூகம். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகப் போலியாக நடிப்பதைவிட, பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கும் ஆண்களிடம் எல்லையோடு பழகுவது என்பதில் உறுதியாக இருக்கலாம். அதனால் திமிர் பிடித்தவள், கர்வம் பிடித்தவள் என்று பெயர் எடுத்தாலும் பரவாயில்லை.

எஸ்.மங்கையர்கரசி, நெய்வேலி.

‘கெட்ட’ பெண்ணுக்கான இலக்கணத்தை ஒரு பெண்ணே உருவாக்குவது வேதனையானது. உலகம் முழுக்கப் பெண்கள் ஆண்களுக்கு நிகராகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது நாம் இன்னும் பெண்களின் அடிப்படை உரிமைகளையும், நடை, உடை, பழக்க வழக்கங்களையும் முடக்க நினைக்கிறோம். பெண்களின் நற்குணங்களைப் பட்டியலிட்டால் எதிர்மறை கருத்துகள் எல்லாம் மலை முன்பு மடுவாகிவிடும்.

ஆர். திவ்யா, விருகாவூர்.

ல்ல பெண்ணுக்கான அடையாளம் அவளது குணநலன்கள் மட்டுமே. எந்தச் சூழ்நிலையிலும் தளராத மன உறுதி வேண்டும். எதற்காகவும் நற்பண்புகளை விட்டுத்தரக்கூடாது.

க. பாலகிருஷ்ணன், சுரண்டை.

வர்கள் ‘கெட்ட’ பெண்கள் என்று அடுக்குகிற பட்டியலைப் பார்த்தால் நம் சமூகத்தில் ஒருவர்கூட நல்ல பெண் பட்டியலில் இடம்பிடிக்க முடியாது. அவள் கெட்ட பெண், இவள் நல்ல பெண் என்று சொல்லிக் கொண்டு திரியாமல் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏதாவது உருப்படியாகச் செய்யலாம். கெட்ட பெண், நல்ல பெண் என்பவை எல்லாமே பார்க்கிறவர்களின் பார்வையைப் பொறுத்தது. அதற்கும் பெண் களின் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லை.

ஜானகி ரங்கநாதன், சென்னை-4

ரு பெண்ணின் அங்க அமைப்புகளை விமர்சிப்பது வக்கிரத்தின் உச்சம். அதை இன்னொரு பெண்ணே செய்தால் அது மன்னிக்க முடியாத கொடூரக் குற்றம். இரவில் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பும் ஆண்களை எதுவும் சொல்லாத இந்தச் சமூகம், பெண்ணை மட்டும் தரக்குறைவாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றங்களோடு விரைந்துகொண்டிருக்கும் காலம் நம் பெண்களிடம் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தன்னிலை அறிந்த பெண்கள் அனைவருமே நல்ல பெண்களே.

லலிதா சண்முகம், திருச்சி.

வீட்டை விட்டு வெளியே செல்லாமல், கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு இன்னாரின் மனைவியாகவும் இன்னாரின் அம்மாவுமாக வாழ்ந்து, தன் அடையாளங்களையே தொலைத்துவிடுகிற பெண்கள் தான் இந்த நூற்றாண்டிலும் நல்ல பெண்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். தன் விருப்பம், ரசனை ஆகியவற்றை வெளிப்படுத்தி, தனி நபர் அடையாளத்தைப் பெறுகிறவள் கெட்டவளாகவே அடையாளப் படுத்தப்படுகிறாள். பெண்கள் தங்களைவிட முன்னேறிவிடக்கூடாது என்று நினைக்கிற ஆணாதிக்க மனோபாவம்தான் இதற்குக் காரணம்.

ச. சாய்சுதா, நெய்வேலி.

ண், பெண் என இரு பாலினத்தினரும் மனிதர்கள்தான். பெண் மட்டும் ஏதோ வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்திருக்கும் ‘வேற்றுலகவாசி’போல் நினைத்துப் பேசுவது அபத்தமாக இருக்கிறது. மனிதர்கள் எல்லோரிடமும் கெட்டவைகளும் நல்லவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்களின் செயல்பாடுகளையும், இருத்தலையும் பற்றி பேசிக்கொண்டே இருப்பது, இந்தியா முன்னேறப்போவதே இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

- நான்ஸி ராணி, சென்னை

ல்ல பெண் என்றால் பிறர்க்கு உதவி செய்பவளாக இருக்க வேண்டும். வீட்டு வளர்ச்சிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் துணைபுரிபவளாக இருக்க வேண்டும். அன்பின் உருவமே பெண்தான். அதனால் நல்ல பெண் என்பவள் அனைவரிடத்தும் அன்பு பாராட்டுபவளாக இருக்க வேண்டும். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் பெண்கள் வளர்ச்சியடைய வேண்டும்.

- ரேவதி விஸ்வநாதன், தேனி.

பெண்களைக் குறித்த பொதுச்சமூகத்தின் புரையோடிப்போன புத்தியையே ‘கெட்ட பெண்கள்’ வரைபடம் விளக்குகிறது. குறிப்பிட்ட சில கருதுகோள்களைக் கொண்டு ஒரு பெண்ணை ‘கெட்டவள்’ எனச் சொல்வது எப்பேர்ப்பட்ட அபத்தம்! பெண்களை உடல்களாக மட்டுமே பார்ப்பதிலிருந்து விடுபடாதவரை, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக கற்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களை ஓரளவேனும் புரிந்து கொள்ளும் சமூகம் எப்போது வாய்க்கப்போகிறதோ?

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்

ரு பெண் தன் உரிமைகளை, நியாயங்களை தட்டிக்கேட்க முயலும்போதெல்லாம் அடங்காதவள், ‘கெட்டப் பெண்’என்று சொல்லி குடும்பத்திலும் சமூகத்திலும் வரையறுத்து வைத்திருக்கிறோம். இதுபோன்ற எழுதப்படாத ஆணாதிக்கச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவளே இங்கே நல்ல பெண்ணாக சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகிறாள்.

-மு.க.இப்ராஹிம் வேம்பார், தூத்துக்குடி.

வெளித்தோற்றத்தை வைத்து பெண்களை எடைபோடக் கூடாது. நாகரிகமாக உடையணிவதால் அவர்கள் கெட்டவர்கள் என்ற கணிப்பு தவறானது. சமூகத்தில் நடக்கும் அநியாயங்களைத் துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் பெண்கள் கெட்டவர்கள் என்கிற ஒரு மாயையை சமூகம் உருவாக்குகிறது.

- என். உஷா தேவி, மதுரை.

ரு பெண் பேசா மடந்தையாக சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொண்டால் அவள் நல்லவள் என்றும், ஒரு வார்த்தை எதிர்த்து பேசினால் திமிர் பிடித்தவள் என்றும், அதிகம் படித்தவள் அகங்காரம் படைத்தவள் என்றும் சொல்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவை எல்லாம் பெண்களை பெண்களே பார்த்து சொல்லும் நடைமுறை வசனங்கள்.

- எம். விக்னேஷ், மதுரை.

ரு பெண்ணுக்கு சுய சிந்தனை என்பது இருக்கக்கூடாது. அப்படி இருந்து விட்டால் அவர் கெட்ட பெண்தான். ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண் போகப்பொருளாகவும், வேலை செய்யும் இயந்திரமாகவும்தான் உலகத்தின் கண்களுக்குத் தெரிகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்த்து நின்றால் அவர் நிச்சயமாக ‘கெட்ட’ பெண்தான்.

- ஜீவன், கும்பகோணம்.

ரு பெண் சுயமாகச் சிந்தித்து செயல்பட துவங்கினாலே அவள் ‘கெட்ட’ பெண்தான். ஆனால், இப்படிப்பட்ட‘கெட்ட’ பெண்களால்தான் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படிந்து ஒரு தலையாட்டி பொம்மையாக வாழ்பவள் நல்ல பெண். ஆனால் இந்த ‘நல்லப் பெண்’ என்ற பட்டத்துக்கு ஆயுள் மிகவும் குறைவு. நம் சமூகத்தின் இத்தனை அழுத்தங்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் பெண்கள் இந்தச் சமூகத்துக்கே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

- ஜே .லூர்து, மதுரை

ந்தியாவில் யாரெல்லாம் ‘கெட்ட’ பெண்கள் என்று நிர்ணயிக்கும் வானளாவிய அதிகாரத்தை ஆண்கள் தம்வசம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே ஆணாதிக்கம் எப்படியெல்லாம் தலைவிரித்தாடுகிறது என்பது நன்கு புரிகிறது. காலமும் உலகமும் எவ்வளவுதான் அசுரவேகத்தில் மாறினாலும், கட்டுப்பெட்டித்தனமாக கிணற்றுக்குள்ளேயே புதைந்து கிடப்பவர்கள்தான் 'நல்ல பெண்'களாக இங்கே இருக்கமுடியும். இது ஒருபோதும் நடக்காது என்பதுபோல் பெண்கள் சமூகம் மாறிவருகிறது.

-சந்திரா மனோகரன், ஈரோடு.

ந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விளக்கப்படம் நூற்றுக்குநூறு உண்மை. பெண்களை மதிக்காமல் பிற்போக்குத்தனமான கருத்துகளைப் பேசிக் கொண்டிருக்கும்வரை ஒரு சமூகம் முன்னேறப் போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மார்ச் 8 அன்று மட்டும் பெண்மையைப் போற்றி அறிக்கைகள் வெளியிடாமல் எல்லா நாளையும் மகளிர் தினமாகக் கொண்டாடுவோம்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

மகளிர் தினம்விவாதம்பெண்கள் அடையாளம்நல்ல பெண்களே

You May Like

More From This Category

More From this Author