Last Updated : 03 Mar, 2015 09:40 AM

 

Published : 03 Mar 2015 09:40 AM
Last Updated : 03 Mar 2015 09:40 AM

விஸ்வரூபம் எடுக்கும் வியாபம்!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கடுமையான சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். ‘‘இளம் வயதிலேயே முதல்வரானவர். கடினமான உழைப்பாளி. நரேந்திர மோடியைவிடச் சிறந்த நிர்வாகி, பணிவானவர்” என்று அத்வானி யால் புகழப்பட்டவர் (அதனாலேயே மோடி ஆதரவாளர்களின் அதிருப்திக்கும் ஆளானவர்). பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதுகுறித்துப் பேசிய போது, “வெற்றிக்குக் காரணம் மக்கள்தான்” என்று சொல்லி மோடி ஆதரவாளர்களை வெறுப்பேற்றியவர். தற்போது, ‘வியாபம்’ எனப்படும் மத்தியப் பிரதேசத் தேர்வு வாரியத்தில் நடந்த ஊழல் விவகாரம் அவரைச் சுழன்றடிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர்கள், போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்-இன்ஸ் பெக்டர்கள், வனக் காவலர்கள், சிறைக் காவலர்கள், உணவு ஆய்வாளர்கள் போன்ற பல பணியிடங்களுக்கான தேர்வுகள் ‘வியாபம்’ தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படுகின்றன. இதில் பலர் லஞ்சம் கொடுத்து தேர்வில் வென்றதாக வெளியான தகவலையடுத்து, ‘வியாபம் முறைகேடு’ வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் உமாபாரதி போன்ற பாஜக மூத்த தலைவர்களுக்கும், சுரேஷ் சோனி, கே.எஸ். சுதர்ஸன் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த மாநிலத்தின் முன்னாள் கல்வித் துறை அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா உட்பட இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எக்ஸெல் ஃபைல்!

இதற்கிடையே, இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவுக்குக் கிடைத்த கோப்பு (எக்ஸெல் ஷீட்), முறைகேடாகத் திருத்தப்பட்டது என்று காங்கிரஸ் தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். வழக்கில் தொடர்புடைய நிதின் மொஹிந்திராவின் கணினியிலிருந்து கிடைத்த எக்ஸெல் ஷீட்டின் பல இடங்களில், முதல்வர் பெயர் நீக்கப்பட்டு அந்த இடங்களில் உமா பாரதி, பிற அமைச்சர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டதாக திக்விஜய் சிங் கூறினார்.

அதேபோல், இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஆண்டு சரணடைந்த சுதீர் சர்மாவுக்கும் சிவராஜ் சிங்கின் மனைவி சாதனா சிங்குக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) ஒன்றையும் பகிரங்கப் படுத்தினார் திக்விஜய் சிங். அதில், சாதனா சிங்கால் பரிந்துரைக்கப்பட்ட நபரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவ், கடந்த வாரம் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அவருக்கும் அவரது மகன் சைலேஷ் யாதவுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறிய மத்திய அரசு, சிவராஜ் சிங்கைக் காக்க முயல்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

“6 பேரைப் பரிந்துரைத்த ராம்நரேஷ் யாதவ் மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்படுகிறது. 48 பேரைப் பரிந்துரைத்த முதல்வர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று கொதிக்கிறார் திக்விஜய் சிங்.

மத்தியப் பிரதேசத்தை பாஜக கைப் பற்றியது முதல் அங்கு அந்தக் கட்சி பெரும் பலத்துடன் இயங்கிவருகிறது. மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 27-ஐ பாஜக வென்றது. உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் வென்று அசைக்க முடியாத பலத்துடன் இருக்கிறது. எனினும், பல கோடி ரூபாய் விளையாடியதாகக் கூறப்படும் வியாபம் முறைகேடு அம்மாநிலத்தில் பாஜக மீதான பிம்பத்தைச் சிதைத்திருக்கிறது. ஆனால், “இந்த விவகாரத்தில் நானோ எனது குடும்பத்தினரோ குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே விலகத் தயார்” என்று சிவராஜ் சிங் கூறிவருகிறார். அதேசமயம், அத்வானியின் ஆதரவாளரான சிவராஜ் சிங் சவுஹானுக்குக் கட்சி மேலிடம் ஆதரவு தராது என்றே தெரிகிறது. மோடிக்கும் இவருக்கும் ஆகாது என்று கூறுபவர்கள் உண்டு. எனினும், “2013 தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ‘இனி நரேந்திர மோடியைப் பிரதமராக்குவதுதான் நமது குறிக்கோள்’ என்று கூறியவன் நான். எனக்கும் மோடிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இல்லை” என்கிறார் சிவராஜ் சிங் சவுஹான்.

காங்கிரஸைச் சமாளிக்கக் கடைசி அஸ்திர மாக, சட்டப் பேரவை ஊழியர்கள் நியமனத்தில் (திக்விஜய் சிங் முதல்வராக இருந்த கால கட்டத்தில்) ஊழல் நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் களேபரங்களுக்கு இடையில், சிவராஜ் சிங்குக்கு எதிரான புகார்களை டெல்லி மேலிடம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதாகக் கூறப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் சிவராஜ் சிங்குக்கு இது இடியாப்பச் சிக்கல்தான்!

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x