

டி.ஆர்.எஸ், முறைப்படி டிவி நடுவரை கள நடுவர்கள் தொடர்பு கொள்ளும் போது நடக்கும் உரையாடலை தொலைக்காட்சி நேயர்களூம் கேட்க ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது.
உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளுக்காக இந்த சிறப்பு ஏற்பாட்டை ஐசிசி செய்துள்ளது. நம் கண்ணுக்கு அவுட் என்று தெரிகிறது. கள நடுவரும் அவுட் என்கிறார். ஆனால் பேட்ஸ்மென் டி.ஆர்.எஸ். கேட்டால் அப்போது டிவி நடுவர் என்ன கூறுகிறார் என்பது நமக்கு இதுவரை ஒலிபரப்பப்படாமல் இருந்தது.
தற்போது நடுவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலை நேயர்களும் கேட்க ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இந்த புதிய முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இப்போது உலகக்கோப்பையில் மீதமுள்ள 7 நாக் அவுட் போட்டிகளிலும் நடுவர்களுக்கு இடையே நடைபெறும் தகவல் தொடர்புகளை நேயர்களும் கேட்கலாம்.
கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் தீர்ப்புக்குச் செல்லும் போதும், ஆலோசனை நடத்தும் போதும், வீரர்கள் மேல் முறையீடு செய்யும் போதும் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இனி நேயர்களும் கேட்க முடியும் என்பது சுவாரசியத்தைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை உலகக்கோப்பை முதல் காலிறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.