Published : 12 Mar 2015 10:37 AM
Last Updated : 12 Mar 2015 05:43 PM
ஈழத் தமிழ் கவிஞர்களில் முதன்மையானவர் கவிஞர் காசி ஆனந்தன். ஈழ மக்களின் வாழ்வியல் போராட்டங்களை உணர்வு ததும்பும் கவிதைகளாக இன்றளவும் பதிவு செய்து வருபவர். இந்திய ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவராக இருக்கும் இவர், போரின் தாக்குதலால் தனது உறவுகளைப் பிரிந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். பிரதமர் மோடி இலங்கை பயணம் மேற் கொண்டிருக்கும் இந்த சூழலில் ஈழத்தமிழ் மக்களின் நிலை குறித்து அவருடன் உரையாடியதில் இருந்து...
இன்றைய சூழலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது?
போருக்குப் பின் தமிழீழ மக்களின் வாழ்க்கை சீரழிந்து போயிருக்கிறது. சிதைந்து நொறுங்கிப் போயிருக்கிறது. அன்றாட உணவுக்கும் வழியற்றவர்களாய் பெரும்பாலான ஏழை மக்கள் உள்ளனர். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள். அவர்களின் வீடுகள் குண்டுவீச்சில் தகர்ந்துபோயின. பிச்சை எடுப்பது வெட்கமென்று கருதும் தமிழீழ மக்கள், பிச்சை எடுக்க முடியாத நிலையில் இன்றைக்குத் தவிக்கிறார்கள்.
13-வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று எதிர்பார்க்கலாமா?
தமிழர்கள் தேடும் விடுதலைக்கும் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்துக் கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சட்டத் திருத்தம் பயனற்றது என்று தொடக்கம் முதலே கூறி வருகிறோம். அதிகாரம் எதுவுமற்ற ஓர் அலுவலகம், அதுதான் மாகாண சபை. சிங்கள ஆட்சியரால் நியமிக்கப்பட்ட ஆளுநரே அதிகாரமிக்கவராக இருக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் வெறும் தலையாட்டியாக இருக்கிறார்.
மாகாண சபைக்கு ஒருபோதும் காவல்துறை அதிகாரம் தரமுடியாது என்றும், ‘வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு பொய்யர். அவருடன் ஒருநாளும் பேச மாட்டேன்’ என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திமிரோடு சொல்லியிருக்கிறார்.
ஒரு நாட்டின் தலைமை அமைச்சருக்கும், அந்த அரசின் கீழுள்ள மாகாண முதல்வருக்கும் இடையே உள்ள உறவு இதுதான் என்றால் மாகாண சபை எப்படி இயங் கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இலங்கை வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தமிழர்கள் வாழ்விலும் மாற்றத்தைத் தருமா?
சென்னைக்கு வந்திருந்த வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனே, மாகாண சபையால் தமிழர்களின் சிக்கலைத் தீர்க்க முடியாது என்று ஒப்புக்கொண்டார். ஒற்றை ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான விடுதலையையும் அமைதியான வாழ்வையும் தரும் என்று அவர் சொன்னார். அவருடைய இந்தக் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.
இப்போதுள்ள நிலையில் இந்திய அரசு செய்ய வேண்டியவையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
இந்திய நலன்களை காப்பதற்காக கடந்த காலங்களில் தமிழ்ஈழ மக்க ளுக்கு எதிரான, சிங்கள ஆட்சியாளர் களுக்கு சார்பான முடிவுகளையே தொடர்ந்து இந்திய அரசு எடுத்து வந்திருக்கிறது. சிங்களவர்க்கு ஆதர வாகவே அமைதிப்படை களமிறங்கியது.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்க சாகடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் போரிலும் சிங்கள அரசுக்கு சார்பாகவே செயல் பட்டது. ஆனால், இத்தனை நிகழ் வுக்கு பிறகும் இன்றும் எங்களோடு இந்திய அரசு நிற்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் தமிழீழ மக்கள் உரிமையோடு முன் வைக்கிறார்கள். ஏனென்றால், சிங்களவர்கள் இன அழிப்பு செய்தவர்கள். நாங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டவர்கள்.
ஈழத் தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப என்ன செய்ய வேண்டும்?
தமிழ் ஈழத்தில் இனி வாழ முடியாது எனும் நிலையில்தான், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த மண்ணை விட்டு தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர். இலங்கையில் தமிழர் இன அழிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா வுக்கும் கனடாவுக்கும் தமிழ் மக்கள் கப்பலேறிக் கொண்டிருக் கும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ் ஈழ மண்ணில் ஆக் கிரமித்திருக்கும் 3 லட்சம் சிங்கள ராணுவத்தினர் மத்தியில்தான் தமிழர்கள் வாழும் சூழ்நிலை உள் ளது. பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய பாகீரதி என்ற தமிழ்ப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது சிங்கள அரசு. ஈழத்தில் தமிழர்கள் வாழ்வதற்கான அமைதியான சூழல் வரும்வரை, இங்குள்ளவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. திபெத்திய அகதிகளை திருப்பி அனுப்பிவிட்டீர்களா என்ன?
இவ்வாறு கவிஞர் காசி ஆனந்தன் கூறினார்.
| இந்திய அரசு எங்களோடு நிற்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழீழ மக்கள் உரிமையோடு இன்னமும் முன்வைக்கிறார்கள். ஏனென்றால், சிங்களவர்கள் இன அழிப்பு செய்தவர்கள். நாங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டவர்கள். |