

உலகக் கோப்பை அரையிறுதியில் 329 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தும் நிலையில், விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. விராட் கோலி 12 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரன்களை குவிப்பார் என்று கோலியை பெரிதும் நம்பி இருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், கோலி ஆட்டமிழந்ததற்கு பாலிவுட் நடிகையும் அவரது தோழியுமான அனுஷ்கா ஷர்மா முக்கிய காரணம் என்கிற ரீதியில் ட்விட்டர்வாசிகள் ஆதங்கமடைந்து பதிவுகளைக் குவித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை போட்டிகளில் மிக முக்கியமான ஆட்டமான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும் இந்த போட்டியைக் காண நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சிட்னியில் முகாமிட்டார்.
கிரிக்கெட் போட்டிகளில் அதிர்ஷ்டத்தை நம்பும் சிலர், அனுஷ்கா ஷர்மா சிட்னி மைதானத்தில் தரை இறங்கியதால், கோலியின் ஆட்டம் பிரமாதமாக இருக்கும் என்று பெரிதும் நம்புவதாக பதிவிட்டனர்.
ஆனால், எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது ஆதங்கத்தை தற்போது அனுஷ்கா ஷர்மாவுக்கு எதிராக குவித்து வசைபாடி வருகின்றனர்.
தற்போது அனுஷ்கா சிட்னியில் இருப்பதாலே, கோலி தனது ஆட்டத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்ற வகையில் இவர்களது விமர்சனங்கள் இடம்பெறுகின்றன.
அவற்றில் சில...
இம்ரான் கான் (@imran): அனுஷ்கா ஷர்மாவை திடீரென இந்தியாவின் எதிரி போல பார்க்கிறீர்களே?
ஜியா (@jiyalogy): பெண் ஒருவரின் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, கவனச் சிதறலும் தான்.
காயத்ரி (@SGayathrie): அனுஷ்காவை மீது குறை சொல்வதை நிறுத்துங்கள். ஒவ்வொரு வீரருக்கும் மோசமான நாள் இருக்கும். அமைதியாக இந்தியாவுக்கு ஆதரவு அளியுங்கள்.
பிரியங்கா (@DesiChaai): அனுஷ்கா, நீங்க NH10 படம் நடிச்சீங்க. ஆனா, உங்க விராத் 10 கூட அடிக்கலேயேமா!
சிஸி மான் (@SuziMann): எனக்கு அப்பவே தெரியும். சிட்னிக்கு அனுஷ்கா சென்றது ரொமப மோசமான ஐடியா.
விஷாலி மோத்தா (@VaishMahi): நானும் அப்பவே சொன்னேன். கோலியின் கவனம் இன்று சிதறிவிட்டது.
கார்த்திகா (@karthika): கோலியின் கவனத்தைச் சிதற வைக்க ஆஸ்திரேலியாக்காரங்க வேண்டுமென்றே கேமராவை அனுஷ்கா பக்கம் திருப்புறாங்க.
அனுஷ்கா சூப்பர் ஃபேன் (@arulovesanu): அனுஷ்காவை திட்டும் உங்கள் அனைவரையும் நான் ப்ளாக் செய்கிறேன். தவறான நோக்கத்தோடு அனுஷ்காவை ட்ரெண்ட் செய்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
டான் (@Juuism): அனுஷ்கா, இப்போது நீங்க கோலியுடன் ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் போகலாம்.