

உலகக்கோப்பை காலிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தாலும் இலங்கை அணி சிறந்த கைகளில் உள்ளது, அதன் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று ஓய்வு பெறும் சங்கக்காரா கூறியுள்ளார்.
சங்கக்காராவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது இந்தக் காலிறுதிப் போட்டி. ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு சில காலங்கள் தொடரும் என்று அவரே கூறியுள்ளார்.
இலங்கை அணிக்காக கடந்த 16-17 ஆண்டுகளாக பல்வேறு விதங்களில் பங்களிப்பு செய்துள்ள மகேலா ஜெயவர்தனே இந்த உலகக்கோப்பையில் சோபிக்கவில்லை. அவர் கடுமையாக இது குறித்து ஏமாற்றமடைந்திருப்பார் என்று கூறிய சங்கக்காரா, ஜெயவர்தனேயுடன் ஆடிய நேரங்கள் குறித்து பேசிய போது, “மகேலா இந்தத் தோல்வியினால் பயங்கர ஏமாற்றம் அடைந்திருப்பார். ஆனால் விளையாட்டில் இதெல்லாம் சகஜம். தேவதைக் கதைபோன்ற முடிவுகள் எப்போதும் சாத்தியமில்லை.
உலகக்கோப்பையில் எவ்வளவு உச்சத்தில் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடக்காது, அது நடக்கவில்லை. அதற்காக ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய அவசியமில்லை.
எங்கள் இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. பகைமை என்பது அறவே இல்லை. நான் அணியில் நுழையும் போது மகேலா ஏற்கெனவே 2 ஆண்டுகள் அணியில் இருந்தார். துணைத் தலைவராகவும் அவர் இருந்தார். எங்கள் இருவருக்கும் ஒரே வயது. இதனாலேயே வெகுவிரைவில் நண்பர்களானோம்.
களத்தில் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்யும் போது, அவர் எப்போதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவார். நான் அவருடன் இன்னிங்ஸை நகர்த்திச் செல்பவனாக திகழ்ந்தேன். அவர் விரைவு ரன் குவிப்பில் செல்லும் போது நான் அடக்கி வாசிப்பேன். அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவமே.” என்றார்.
இலங்கை அணி குறித்து அவர் கூறும்போது, “இலங்கை அணி சிறந்த கைகளில் உள்ளது. அஞ்சேலோ மேத்யூஸ் தலைமைத்துவத்தில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.
திலகரத்னே தில்ஷன் இன்னும் சிறிது காலம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். லாஹிரு திரிமானி ஆட்டத்தில் பெரிய முன்னேற்றம் இருந்து வருகிறது.
இந்த இளம் வீரர்களை என்னுடைய இளம் வயதை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது நான் இருந்த நிலையை விட நல்ல நிலையில் உள்ளதாகவே கருதுகிறேன். இன்னும் இவர்கள் கற்றுக் கொள்வார்கள், இலங்கைக்காக மேலும் பங்களிப்பு செய்வார்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாகவே உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை.” என்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி தோல்வி குறித்து...
"தோல்வியடைந்தது ஏமாற்றமே. குறிப்பாக காலிறுதியில் தோல்வி தழுவியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒர் அணியுடன் வெற்றி பெற சிறப்பாக ஆட வேண்டும் என்பதே உண்மை.
என்னுடன் விளையாடியதையும், எனக்கு எதிராக விளையாடியதையும் மகிழ்ச்சியான தருணங்களாக யாராவது கூறினால் நான் அதிக மகிழ்ச்சியடைவேன்.
எவ்வளவோ பெரிய வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால் ஆட்டம் தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. ரசிகர்கள் எப்போதும் மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடாது.” என்றார் சங்கக்காரா.
404 ஒருநாள் போட்டிகளில் 14,234 ரன்களை எடுத்த சங்கக்காரா இதில் 38 சதங்களை எடுத்துள்ளார். சராசரி 41.98. விக்கெட் கீப்பராக 402 கேட்ச்கள், 99 ஸ்டம்பிங்குகள்.
நடப்பு உலகக்கோப்பையில் 7 இன்னிங்ஸ்களில் சங்கக்காரா 541 ரன்களை 108 ரன்கள் என்ற சராசரியில் எடுத்துள்ளார்.