

மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பேட்ஸ்மென் அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி துணைக் கேப்டனாக செயல்படுவார், சர்பராஸ் அகமட் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அப்ரீடி டி20 அணியின் கேப்டனாக நீடிக்கிறார். அணித் தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹரூண் ரஷீத் தேர்வுக்குழு தலைவரானார்.
அசார் அலியை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பற்றி பல விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. அசார் அலி இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 41.09. ஆனால் இவர் கடைசியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியது ஜனவரி 2013-ல் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் நிலையில் களமிறங்கி நிதானமாக சில சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார் அசார் அலி.
உமர் அக்மல், அகமட் ஷெசாத் போன்ற மூத்த வீரர்கள் இருக்கையில் அசார் அலிக்கு ஒருநாள் கேப்டன் பொறுப்பை அளித்திருப்பதனால் அணியின் ஒற்றுமை பாதுகாக்கப்படுமா என்று அசார் அலியைக் கேட்ட போது, “நான் இவர்களுக்கு முன்னதாக கேப்டனாக இருந்துள்ளேன். அதனால் பிரச்சினை இருக்காது. இவர்கள் இருவருமே அருமையான வீரர்கள். எனது கேப்டன்சியில் மேலும் சிறப்புடன் திகழ்வார்கள்.” என்றார்.