Published : 25 Mar 2015 07:26 PM
Last Updated : 25 Mar 2015 07:26 PM

ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: கணிக்கிறது மீன் ஜோதிடம்

உலகக் கோப்பை ஜுரம் எல்லோரையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இளம் வீரர்கள், வென்ற கோப்பையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் இந்திய ரசிகர்களை, தொடர்ந்து 7 முறை, எதிரணியினரை ஆல்-அவுட் ஆக்கி, கம்பீரமாய் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கின்றனர் இந்திய அணியினர்.

ஆனால், நாளை அரையிறுதிப் போட்டியில் நாம் மோதப்போவது 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவானான ஆஸ்திரேலியாவுடன். யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களைத் தாண்டி பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அலுவலகத்துக்கும் கல்லூரிக்கும் பலர் விடுமுறை எடுத்து, ஆட்டத்தைக் காணும் ஆர்வத்தில் இருக்கின்றனர். எல்லோரிடமும் ஆவலையும், அச்சத்தையும் ஒருங்கே காணமுடிகிறது.

விலங்குகளையும், பிராணிகளையும் கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறப்போகும் அணி எது என்று கணிக்கும் ஜோதிடம், உலகளவில் வெகுவாகப் பிரபலமாகி வருகிறது. கடந்த முறை 2011ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் பால் என்று அழைக்கப்பட்ட ஆக்டோபஸ் வெற்றி பெறப்போகும் அணியைத் 85 சதவீதம் சரியாகக் கணித்து, கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதே போல ஸ்பெயின் மற்றும் சிலி இடையிலான உலகக் கோப்பையில் ஸ்பெயின் வெற்றி பெறும் என ஸ்பெயின் கொடியைச் சரியாகக் கவ்விப்பிடித்தது துபாயைச் சேர்ந்த ஒரு ஒட்டகம்.

2006ல் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பையில், அமெரிக்கா, கானாவை வெற்றி கொள்ளும் என, பந்தை அமெரிக்க அணியின் கோர்ட்டை நோக்கி உதைத்து, வெற்றியைச் சரியாகக் கணித்து ஸ்டாரானது யானை. இதே போல் கடல் ஆமை, பன்றிக் குட்டி, கங்காரு ஆகிய விலங்குகளும் உலகமெங்கும் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் வெற்றிகளைக் கணித்தன.

இந்நிலையில் 'சாணக்யா' என்னும் மீன் நாளை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெல்லப்போகும் அணி எது எனக் கணித்திருக்கிறது.

சென்னை, அண்ணா நகரில் அமைந்துள்ள ICWO என்னும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தினர் 'சாணக்யா'வை வளர்த்து வருகின்றனர்.

மீன் தொட்டிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொடி பொறித்த அட்டைகளைப் போட, சாணக்யா மெல்ல கொடி அட்டைகளை நோக்கி வந்தது. அனைவரும் ஆர்வத்துடன் சாணக்யாவைப் பார்த்தபடி இருக்க, சாணக்யா இந்தியக் கொடி பொறிந்த அட்டையைக் கவ்வியது.

இந்தியக் கொடியைத் தொட்டதும் சுற்றி நின்றிந்தவர்கள் ஆரவாரம் செய்ய, , கம்பீரமாய் மீண்டும் நீந்திக் கொண்டிருந்தது 'சாணக்யா'

இப்படி மீன் மூலம் வெற்றியை கணிக்க காரணம் என்ன என்று ICWO அமைப்பினரிடம் கேட்டோம்.

இந்த நிகழ்வின் மூலம், தண்ணீர் வளத்தைக் காக்க வேண்டும் என்ற செய்தியை மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்கிறார் ICWOவின் நிறுவனர் ஹரிஹரன்.

முன்னதாக, இலங்கை Vs தென் ஆப்பிரிக்கா, இந்தியா Vs பங்களாதேஷ், பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா, நியூசிலாந்து Vs மே. இ. தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா Vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்திருக்கிறது சாணக்யா.

பரபரப்புடன் இந்திய வெற்றியை எதிர்நோக்கும் இந்திய ரசிகர்களுக்கு, இந்த மீன் ஜோதிடம் மகிழ்ச்சியளிக்கிறது.

நாளை இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழையுமா? உலகக் கோப்பையை நாமே தக்க வைத்துக் கொள்ள இந்த ‘சாணக்யத்தனம்' போதுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x