

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக ஜக்மோகன் டால்மியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் சீனிவாசனின் ஆதரவாளர் ஆவார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் டால்மியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிசிசிஐ தலைவராகியிருக்கிறார்.
அதேநேரத்தில் பிசிசிஐ செயலாளராக சீனிவாசனின் எதிர்தரப்பைச் சேர்ந்த அனுராக் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சரத் பவாரின் ஆதரவாளரான இவர் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சீனிவாசன் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜக்மோகன் டால்மியாவை எதிர்த்து போட்டியிட இருந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான சரத் பவாரின் பெயரை கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த யாரும் முன்மொழியாததால் அவர் போட்டியிலிருந்து விலக நேர்ந்தது. இதையடுத்து ஜக்மோகன் டால்மியா புதிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹிமாசலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அனுராக் தாகூர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏற்கெனவே செயலாளராக இருந்து வந்த சஞ்சய் பட்டேலை தோற்கடித்தார். சீனிவாசனின் ஆதரவாளர்களில் யாரோ ஒருவர் ஓட்டை மாற்றிப் போட்டதன் மூலம் அனுராக் தாக்கூர் வெற்றி பெற்றார். இல்லையெனில் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது.
எனினும் எஞ்சிய அனைத்து பதவிகளுக்கும் சீனிவாசன் ஆதரவாளர்களே தேர்வாகியுள்ளனர். இணைச் செயலாளர் பதவிக்கான போட்டியில் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த அமிதாப் சவுத்ரி, கோவா கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த சேத்தன் தேசாயை தோற்கடித்தார்.
சேத்தன் தேசாய், எதிர் கோஷ்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாளர் பதவிக்கான போட்டியில் ஹரியாணா கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த அனிருத் சவுத்ரி, ராஜீவ் சுக்லாவை தோற்கடித்தார்.
5 பேர் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர் களில் ஆந்திரத்தைச் சேர்ந்த கோகராஜூ கங்கராஜூ (தெற்கு மண்டலம்), அசாமைச் சேர்ந்த கவுதம் ராய் (கிழக்கு மண்டலம்), ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த எம்.எல்.நேரு (வடக்கு மண்டலம்) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கேரளத்தைச் சேர்ந்த டி.சி.மேத்யூஸ் (மேற்கு மண்டலம்), ரவி சவந்தையும், டெல்லியைச் சேர்ந்த சி.கே.கண்ணா (மத்திய மண்டலம்), செல்வாக்குமிக்கவரான ஜோதிராதித்ய சிந்தியாவையும் தோற்கடித்து துணைத் தலைவர்களாகியுள்ளனர்.
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம், சீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருப்பதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் நிர்வகிப்பதன் மூலம் இரட்டை ஆதாயம் பெற்று வருகிறார். எனவே ஏதாவது ஒன்றை மட்டுமே அவர் வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் காரணமாக கடும் நெருக்கடிக்குள்ளான சீனிவாசன், மீண்டும் தலைவராகும் பொருட்டு தேர்தலை பல முறை ஒத்திவைத்தாலும், அவருக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. அதனால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது தனது ஆதரவாளரான டால்மியாவை பிசிசிஐ தலைவராக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.