ராஜஸ்தானிடம் பெங்களூரு பரிதாப தோல்வி

ராஜஸ்தானிடம் பெங்களூரு பரிதாப தோல்வி
Updated on
1 min read

அபுதாபியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி இலக்கான 71 ரன்களை 13 ஓவர்களிலேயே அந்த அணி தொட்டது.

பெங்களூரு அணி நிர்ணயித்த எளிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, ரஹானே சிறப்பான துவக்கத்தைத் தந்தார். 4 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி 5-வது ஓவரில் 23 ரன்களுக்கு ரஹானேவை இழந்தது.

தொடர்ந்து சாம்சன் 1 ரன்னிற்கும், நாயர் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் வாட்சன் மற்றும் நாயரின் பொறுப்பான ஆட்டத்தால் 13 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 71 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வாட்சன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நாயர் ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்டநாயகனாக டாம்பே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது. 15 ஓவர்களில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பெங்களூரு அணி இழந்தது.

அந்த அணியின் விராட் கோலி அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார். 7 பெங்களூரு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்துவீசிய டாம்பே 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி எடுத்த 70 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்துள்ள 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in