

பஞ்சாபிடம் தோல்வி: தவண் சாடல்
எங்கள் அணியில் பீல்டிங் சரியில்லை, பேட்டிங்கும் மோசமாக அமைந்துவிட்டது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவண் கூறியுள்ளார். பஞ்சாப் அணியிடம் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து அவர் மேலும் கூறியுள்ளது:
நாங்கள் ஏராளமான கேட்ச் களை கோட்டைவிட்டோம். முக்கியமாக மேக்ஸ்வெல்லின் கேட்சை தவறவிட்டதால், அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அதிக ரன்களை எடுத்துவிட்டார். நாங்கள் எட்ட வேண்டிய இலக்கும் அதிகமாக இருந்தது. இது பேட்ஸ் மேன்களுக்கு நெருக்கடி யாக அமைந்தது என்றார்.ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹைதராபாத் 19.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பார்சி. ஓபன்: சோம்தேவ் வெற்றி
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ்-குரேஷியாவின் ஆன்டே பேவ்சிச் ஜோடி வெற்றி கண்டது. இந்த ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பௌதிஸ்டா-ஆல்பர்ட் மான்டேன்ஸ் ஜோடியை தோற்கடித்தது.
ககாராவுக்கு வெண்கலம்
பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக யூத் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷியாம் ககாரா 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் யூத் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற ககாரா, அரையிறுதியில் 1-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஷல்காரிடம் தோல்வி கண்டார்.