

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் கடும் அதிருப்தியடைந்த அந்த அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி, கேப்டன் முகமது ஹபீஸையும், சக வீரர்களையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திட்டினார்.
இதனால் அவருக்கு கேப்டன் பதவியை வழக்கும் யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுபரிசீலனை செய்து வருகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் 84 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் பாகிஸ்தான் இழந்தது.
தோல்விக்குப் பின் பாகிஸ்தான் அணி நாடு திரும்பியது. கராச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அப்ரிடி, பாகிஸ்தான் அணி வீரர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள்தான் அதிகம் உள்ளன. இதுதான் வங்கதேசத்தில் தோல்வியடையக் காரணம். அணியின் கேப்டனாக இருப்பவர் அணியை வழி நடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அவர் சரியில்லை என்றால் எதுவும் சரியாக இருக்காது. வீரர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கேப்டன் நடக்க வேண்டும் என்று கூறினார்.
அப்ரிடியின் இந்த பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் இருந்து நாடு திரும்பியதுமே தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் அறிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேத், அப்ரிடியின் பேச்சு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேச வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. அப்ரிடி யாரிடம் அனுமதி கேட்டு இவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை. நான் அவரது இடத்தில் இருந்திருந்தால், நிச்சயமாக பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்க மாட்டேன் என்றார்.
இருபது ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் கேப்டனாக அப்ரிடி நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் அவரது பேச்சால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது யோசனையை மறுபரிசீலனை செய்து வருகிறது.
அதே நேரத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப், அப்ரிதிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் மூத்த வீரரான அப்ரிதியை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.