

சிட்னியில் வியாழக்கிழமை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வெல்வது உறுதி என்று முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் இது குறித்து ஹெய்டன் கூறும் போது, “தெளிவாக, இந்திய அணியை ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்றே நான் கருதுகிறேன்.
இந்தியப் பந்துவீச்சு என்னை கவர்ந்துள்ளது. ஜடேஜா, அஸ்வின் மூலம் ஸ்பின் பந்துவீச்சு பிரிவில் இந்தியா பலமாக உள்ளது. இவர்கள் நாளைய ஆட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரை நன்றாகவே வீசிவந்தாலும், அவர்களுக்கு இதுவரை சவால் ஏற்படவில்லை. அவர்கள் வேகப்பந்து வீச்சின் பலவீனங்கள் அம்பலமாகவில்லை. நாளை ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு எதிராக அம்பலமாகும் என்று கருதுகிறேன்.
பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் அபாயகரமானவர்கள். ஆஸ்திரேலியா சில விரைவு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்த பிட்சில் ரெய்னா, தோனி ஆகியோரது பேட்டிங் அபாகரமானதாக ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
லீக் ஆட்டங்களை வைத்து இந்தியாவை எடைபோட முடியவில்லை. காரணம் அவர்கள் உண்மையில் பரிசோதிக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் கடைசி ஓவர்கள் வரை செல்லவில்லை அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மோசமான தினத்தை அளித்தது இந்தியா.
அனைத்துப் போட்டிகளையும் இந்தியா வென்றுள்ளது. சிட்னி மைதானம் அவர்கள் பாணி ஆட்டத்துக்கு உதவும். ஆனால் இந்த சீசனில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு வரிசையாக தோல்விகளை அளித்துள்ளதே.”
இவ்வாறு கூறினார் மேத்யூ ஹெய்டன்.