

நியூசிலாந்தில் உள்ள நெல்சனில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 318 ரன்கள் குவித்து அதிர்ச்சி அளிக்க, வங்கதேசம் 322/4 என்று அனாயாசமாக வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் கே.ஜே.குயெட்சர் தனது ஆட்டத்திறன் முழுதையும் காண்பித்து 134 பந்துகளில் 17 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 156 ரன்கள் குவித்தார். இவர் முதல் 50 ரன்களை 54 பந்துகளிலும் அடுத்த 50 ரன்களை 49 பந்துகளிலும் அடுத்த 50 ரன்களை 26 பந்துகளிலும் எடுத்தார். 45-வது ஓவரில்தான் இவர் ஆட்டமிழந்தார். மச்சன் (35), மாம்சென் (39), பெரிங்டன் (26) ஆகியோரும் விரைவுப் பங்களிப்பைச் செய்ய 50 ஓவர்களில் ஸ்காட்லாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் இடது கை தொடக்க வீரர் தமிம் இக்பால், வங்கதேச அணிக்காக முதல் உலகக்கோப்பை சதம் அடித்திருப்பார். ஆனால் அவர் 95 ரன்களில் வெளியேறினார். மஹ்முதுல்லா 62 ரன்களையும், முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்களையும் ஷாகிப் அல் ஹசன் 52 ரன்களையும், சபீர் ரஹ்மான் அதிரடி 42 ரன்களையும் எடுக்க வங்கதேசம் 49-வது ஓவர் முதல் பந்தில் காரியத்தை முடித்தது. 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் வங்கதேசம் 5 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மார்ச் 9ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்து-வங்கதேசம் மோதும் போட்டி ஒரு அருமையான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்காட்லாந்து நல்ல உத்வேகத்துடன் இன்று ஆடினர். குயெட்சர் எடுத்த 156 ரன்கள் அசோசியேட் அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டெஸ்ட் அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து எடுக்கும் அதிகபட்ச மொத்த ரன்களாகும் இது.
ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட குயெட்சர், கேப்டன் மாம்செனுடன் (39) 141 ரன்கள் கூட்டணி அமைத்தார். பிறகு மச்சன் (35) உடன் 78 ரன்கள் கூட்டணி அமைத்தார். 45-வது ஓவரில் 269/5 என்ற நிலையில் குயெட்சர் அவுட் ஆக, ரிச்சி பெரிங்டன் (26), மேட் கிராஸ் (20) விரைவாக 39 ரன்களை சேர்த்தனர். ஸ்காட்லாந்து 318 ரன்களை எடுத்தது. வங்கதேச தரப்பில் இந்த தடவை மோர்டசாவுக்கு சாத்துமுறை. 8 ஓவர்களில் 60 ரன்கள் உபயம். டஸ்கின் அகமட் 7 ஓவர்களில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்.
இலக்கைத் துரத்தக் களமிறங்கும் முன்னரே வங்கதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது தொடக்க வீரர் அனாமுல் ஹக் காயம் காரணமாக இறங்க முடியாது என்ற செய்தி எட்டியது. ஆட்டத்தின் 31-வது ஓவரின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அனாமுல் காயமடைந்தார். வலது தோள்பட்டைக் காயம் அவரை இறங்கவிடாமல் செய்தது. தமிம் இக்பால் தன் இன்னிங்ஸை அழகாகக் கட்டமைத்தார். 2 புல்ஷாட்கள், ஒரு ஹூக் சிக்ஸ் என்றும் ஆஃப் ஸ்டம்ப் அதி லெந்த் பந்துகளை கவர் திசையில் அருமையாக இடைவெளியில் அடித்தும் சிறப்பாக ஆடினார். 53 பந்துகளில் 50-ஐ எட்டினார் தமிம்.
ஆனால் 95 ரன்களில் டேவி அவரை எல்.பி. செய்தார். ஆனால் அஷரபுல் எடுத்த 87 ரன்கள் என்ற உ.கோப்பை வங்கதேச அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரைக் கடந்தார் தமிம். மஹ்முதுல்லாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 10 மற்றும் 15-வது ஓவரில் இருமுறை அவர் ரன் அவுட் ஆக வேண்டியது. இவரும் கவர் திசையில் அருமையான ஷாட்களை ஆடினார். ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் தூக்கினார். 62 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தமிம்முடன் இணைந்து 139 ரன்கள் கூட்டணி அமைத்தது மிக முக்கியமாக அமைந்தது. இவருக்கு லெய்ன் வார்ட்லா பாதம் பெயர்க்கும் யார்க்கர் ஒன்றை வீசி வீழ்த்தினார்.
முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கி மிகச் சுறுசுறுப்பாக ஆடினார். 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 ரன்களை எடுத்தார். லாங் ஆஃபில் அடித்த சிக்ஸ் அமர்க்களமானது. இவர் ஆட்டமிழந்த பிறகு வங்கதேசத்துக்கு வெற்றிக்கான ரன் விகிதம் ஓவருக்கு 6 என்று ஆனது. இதனை ஷாகிப் அல் ஹசன், சபீர் ரஹ்மான் திறம்படச் செய்து முடித்தனர்.
ஆட்ட நாயகனாக குயெட்சர் தேர்வு செய்யப்பட்டது அருமையான தேர்வு. 1987ஆம் ஆண்டு டெஸ்ட் நாடாக இல்லாத ஜிம்பாப்வேயின் டேவிட் ஹட்டன் நியூசி. அணிக்கு எதிராக எடுத்த 142 ரன்கள் என்ற சாதனையை குயெட்சர் முறியடித்தார். தொடக்கத்தில் இவருக்கு ஸ்ட்ரைக் அதிகம் கிடைக்கவில்லை. அதற்குள் ஸ்காட்லாந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன் பிறகு குயெட்சர் உள்பக்கமாக நகர்ந்து கொண்டு ஷாட் பிட்ச் பந்துகளை புல் ஆடிய விதமும், கவர் திசையில் ஆடிய ஆட்டமும் அமர்க்களம். ரூபல் ஹுசைன் பந்தை லாங் ஆனில் சிக்ஸ் அடித்து சதம் எடுத்தார் குயெட்சர். ;லெக் திசையில் மிகவும் பலமான வீரராக இருந்தார் குயெட்சர்.
மீண்டும் ஒரு 300 ரன்களுக்கும் மேலான ஒரு இலக்கு ஒன்றுமில்லாமல் ஆகியுள்ளது. உலகக்கோப்பை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில்தான் நடைபெறுகிறதா?