

2003 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை கிளென் மெக்ரா தொடக்கத்திலேயே வீழ்த்தினார்.
அந்தப் போட்டி பற்றி கிளென் மெக்ரா கூறியிருப்பதாவது:
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற தினத்தன்று வலைப்பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்த போது நிறைய சப்தம் மற்றும் ஆற்றல்கள் இருந்தன. எங்களுக்கு அடுத்தபடியாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், அங்கு அமைதி நிலவியது. நாங்கள் அந்த இறுதிப் போட்டியை மகிழ்ச்சியுடன் ஆடினோம், ஆனால் இந்தியா அப்படி விளையாடவில்லை. ஆனால், ஒன்றைக்கூறுவது உசிதம், இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை நான் தொடக்கத்திலேயே வீழ்த்தியதற்காக இந்திய ரசிகர்கள் என்னை மன்னிக்கப்போவதில்லை.” என்றார் கிளென் மெக்ரா.
சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் வேகப்பந்துவீச்சு அகாடமிக்கு பயிற்சி கொடுக்க வந்த கிளென் மெக்ரா, நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இறுதிக்குச் செல்லும் என்று ஆரூடம் கூறியுள்ளார்.
இந்தியாவும்-தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்குச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
இந்திய அணி பற்றி கிளென் மெக்ரா கூறும்போது, “இந்திய அணியின் பேட்டிங் வரிசை அபாரம், பந்துவீச்சு டெஸ்ட் போட்டியில் திணறினாலும் தற்போது நன்றாக வீசுகின்றனர். கடந்த 2 போட்டிகளில் இந்திய பவுலர்கள் நல்ல அளவு மற்றும் திசையில் வீசினர். மொகமது ஷமி அருமையாக வீசுகிறார், உமேஷ் யாதவ் பந்துவீச்சும் கூர்மையாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் வருண் ஆரோன் நன்றாகவே வீசினார். அவரது பந்துவீச்சில் கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. அவரை உலகக்கோப்பை அணியில் இந்தியா சேர்த்திருக்க வேண்டும்.
உலகக்கோப்பையில் பிட்ச்கள் இப்படித்தான் இருக்கும் என்பது தெரியும், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய களங்கள் இவ்வளவு ஃபிளாட்டாக இருந்து நான் பார்த்ததில்லை, பிட்ச்கள் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டது போல்தான் தெரிந்தது.”
இவ்வாறு கூறினார் கிளென் மெக்ரா.