

ஷிகர் தவன் பேட்டிங்கில் திணறி வருகிறார். எனவே ஸ்டூவர்ட் பின்னியை தொடக்க வீரராகக் களமிறக்கலாம் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.
வரும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவின் பந்துவீச்சு பலவீனம் பெரிய கவலையளிக்கக் கூடிய அம்சமாகும். 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது சிறந்தது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சானலில் நடந்த உரையாடலின் போது அவர் கூறியதாவது:
இந்திய அணியின் மிகப்பெரிய கவலை பந்துவீச்சே. எந்த ஒரு நல்ல அணிக்கு எதிராகவும் 300 ரன்களை இந்திய அணி விட்டுக் கொடுத்துவிடும். இந்திய அணி இலக்குகளை நன்றாகத் துரத்துபவர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால், அது கூட நல்ல பந்துவீச்சு உள்ள அணிகளுக்கு எதிராக கடினமே. இந்திய அணியின் பந்து வீச்சு தாறுமாறாக உள்ளது. எந்த வித முன்னேற்றத்தையும் நான் காணவில்லை.
இந்திய அணி 2 ஸ்பின்னர்களை வைத்துக்கொள்வது நல்லது. அஸ்வின் முக்கியம் அக்சர் படேல் பந்துவீச்சு எனக்குப் பிடித்திருக்கிறது. பொதுவாக இந்திய அணியின் பலம் ஸ்பின் பவுலிங்கே, அதனால் 2 ஸ்பின்னர்களுடன் இறங்குவது நல்லது.
நல்ல ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள். நேதன் லயன் ஆஸ்திரேலியாவுக்கு செய்வதைப் போல், ஆனால் இங்கு ‘நல்ல’ என்ற வார்த்தை மிக முக்கியம்.
பேட்டிங்கில் ஷிகர் தவன் மிகவும் தடுமாறி வருகிறார். உத்தி ரீதியாக ஸ்டூவர்ட் பின்னியின் பேட்டிங் திறமையாக உள்ளது. அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்கலாம். மேலும் பந்துவீச்சும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்திய அணியில் உண்மையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், துல்லியமற்று எவ்வளவு வேகம் வீசினாலும் அது பயனளிக்கப் போவதில்லை. எனவே வேகப்பந்து வீச்சை முதல் போட்டிக்குள் நன்றாகச் செய்துவிட்டால், பின்னி சில கூடுதல் ஓவர்களை வீசச் செய்வது கூடுதல் பயனளிக்கும். இதனை விடுத்து ஆஸ்திரேலியா என்பதாலேயே கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தால் அது பின்னடைவையே அளிக்கும்.” என்கிறார் இயன் சாப்பல்.