Published : 20 Feb 2015 10:33 am

Updated : 20 Feb 2015 10:33 am

 

Published : 20 Feb 2015 10:33 AM
Last Updated : 20 Feb 2015 10:33 AM

உலக மசாலா: உறைந்த நயாகரா!

உலகின் அழகான அருவிகளில் ஒன்றான நயாகரா, மிகக் குளிரான தட்பவெட்ப நிலையால் உறைந்து போய்விட்டது. அதிகம் தண்ணீர் விழக்கூடிய ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அருவி நீர் உறைந்து நிற்கிறது.

உறைந்துள்ள நயாகராவைப் பார்ப்பதற்காக இந்தப் பனியிலும் மக்கள் வருகிறார்கள். பனிப் புயல் வீசி வருவதால் ஜார்ஜியா, வட கரோலினா, தென் கரோலினா போன்ற பகுதிகளில் 3,30,000 மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றனர்.


18 அங்குலம் உயரத்துக்குச் சாலைகளில் பனி உறைந்துள்ளதால், நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. இந்த வானிலை இன்னும் மோசமடையும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு பக்கம் உறைபனி… இன்னொரு பக்கம் கொளுத்தும் வெயில்… என்ன உலகமப்பா…

பிரேஸிலில் கால்பந்து விளையாட்டு எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு ரசிகர்களின் வன்முறைகளும் அதிகம். உள்ளூர் விளையாட்டுகளில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.

கடைசி முயற்சியாக ரசிகர்களின் அம்மாக்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்குப் போதிய பயிற்சிகளையும் கொடுத்தனர். கால்பந்து விளையாட்டு ஆரம்பிக்கும்போது ஆரஞ்சு வண்ண கோட் அணிந்த அம்மாக்கள் ஸ்டேடியத்தைச் சுற்றி வந்தனர்.

அம்மாக்களைக் கண்ட ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். விளையாட்டு ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அம்மாக்கள் கண்காணித்தனர். ஒரு வன்முறை சம்பவம் கூட நடைபெறவில்லை. கால்பந்து க்ளப் ஊழியர்கள் தங்கள் யோசனை வெற்றி பெற்றதிலும் வன்முறை இல்லாமல் போட்டி நடைபெற்றதிலும் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்.

அட! பிரமாதமான ஐடியாவா இருக்கே…

செல்ஃபி எடுப்பதில் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறார் சீனாவில் வசிக்கும் கெய்சுகே ஜினுஷி. அவரது செல்ஃபி படங்களைப் பார்த்தால் அவருடன் ஒரு பெண்ணும் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் பெண்ணின் முழு உருவம் இல்லை. அ

தாவது அவரே ஒரு கையைப் பெண்ணின் கை போலப் பயன்படுத்தி செல்ஃபி எடுக்கிறார். வலது கையில் நெயில் பாலிஷ், பிரேஸ்லெட் போன்றவற்றை அணிந்து பெண்ணின் கை போல தோற்றத்தை உருவாக்குகிறார். அந்தக் கையால் தனக்குத் தானே கேக் ஊட்டுவது போல, வாயில் வழியும் உணவைத் துடைப்பது போல, கொஞ்சுவது போல என்று தன் கற்பனையை விரித்து எடுத்துத் தள்ளுகிறார்.

ஒவ்வொரு படமும் ஜினுஷியின் திறமையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. ரசிக்கவும் வைக்கிறது.

ஆபத்தில்லாமல் செல்ஃபி எடுத்தால் ஒகேதான்…

பிரிட்டனில் வசிக்கிறார்கள் ஃப்ளோரன்ஸ் டேவிஸ் க்ளெனிஸ் தாமஸ் சகோதரிகள். இவர்கள் இரட்டையர்களாக 1912ம் ஆண்டு பிறந்தனர். 103 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு உலகப் போர்கள், குடியுரிமைப் போராட்டங்கள், டைடானிக் கப்பல் மூழ்கிய சோகம், தொழில்நுட்ப வளர்ச்சி என்று எத்தனையோ விஷயங்களைப் பார்த்துவிட்டனர்.

5 குழந்தைகள், 12 பேரன், பேத்திகள், 19 கொள்ளுப் பேரன், பேத்திகள் இவர்களுக்கு இருக்கிறார்கள். குழந்தை முதல் இன்று வரை இருக்கும் சகோதரிகளின் புகைப்படங்கள் ஒரு நூற்றாண்டு வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தாலும் சகோதரிகள் தங்கள் கிராமத்தை விட்டு எங்கும் சென்றதில்லை. அமைதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திருப்பதாக நிறைவாகச் சொல்கிறார்கள்.

ஆஹா! அபூர்வ சகோதரிகள்!உலக மசாலாஉறைந்த நயாகரா

You May Like

More From This Category

More From this Author