

உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஏ-பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியது.
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து கேப்டன் மாம்சென் டாஸ் வென்று முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க அந்த அணி மொயீன் அலி (128 ரன்கள், 107 பந்துகள், 12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்) மற்றும் இயன் பெல் (54) ஆகியோரின் அபாரமான தொடக்கத்தினால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து 42.2 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது. இந்த அணியின் தொடக்க வீரர் குயெட்சர் மட்டுமே சிறப்பாக விளையாடி 84 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். மற்றவீரர்கள் ஒருவரும் 30 ரன்களை எட்டவில்லை.
பேட்டிங்கில் அசத்திய மொயீன் அலி பிறகு பந்துவிச்சிலும் 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
முதலில் பேட் செய்யும் அணிகள் 300 ரன்களை குவித்து வருகிறது என்பது இந்த உலகக்கோப்பையில் வழக்கமாகி வரும் நிலையிலும் ஸ்காட்லாந்து கேப்டன் ஏன் இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார் என்பது புரியாத புதிர்.
மொயீன் அலி, இயன் பெல் 30.1 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் உலகக்கோப்பை போட்டி சாதனையாகும். 1975 உலகக்கோப்பையில் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இங்கிலாந்து தொடக்க வீரர்கள் டெனிஸ் அமிஸ், பேரி உட் சேர்த்த 158 ரன்களே இங்கிலாந்தின் சாதனையாக இருந்து வந்தது.
இங்கிலாந்து உண்மையில் 330 அல்லது 340 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 201/1 என்ற நிலையில் மொயீன் அலி அவுட் ஆக, பேலன்ஸ் (10), ரூட் (1) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசியில் இயன் மோர்கன் 46 ரன்களை 42 பந்துகளில் எடுத்தார். பட்லர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க, எக்ஸ்ட்ராஸ் வகையில் 21 ரன்களும் உதவி புரிய இங்கிலாந்து 303 ரன்களை எட்டியது. ஸ்காட்லாந்து அணியில் டேவி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து ஆண்டர்சன், வோக்ஸ், ஸ்டீவ் ஃபின் ஆகியோரது பந்து வீச்சில் தங்களது டாப் 3 விக்கெட்டுகளை 12-வது ஓவரில் 54 ரன்களுக்கு இழக்க அதன் பிறகு அந்த அணி எந்த நிலையிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பில்லாமல் போனது.
நாளை பிரிவு பி போட்டியில் மே.இ.தீவுகள் அணி ஜிம்பாப்வே அணியை ஆஸ்திரேலியாவின் மனுகா ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இது பகலிரவு ஆட்டம் என்பதால் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.