

இன்றைய கிரிக்கெட் களத்தில் வீரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
நியூஸ்24 கிரிக்கெட் சந்திப்பில் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார்.
“களத்தில் தோனி அமைதியாக இருக்கிறார். ஆட்டம் மட்டுமே பேச வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது நடத்தை பெரிய பாராட்டுக்குரியது.
இன்றைய கிரிக்கெட் ஆடுகளம் வீரர்களிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் நிரம்பியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட பிரயோகிக்காது களத்தில் செயல்படுகிறார் தோனி. ஒழுக்கமான கிரிக்கெட் வீரர் என்பதற்கு தோனி ஒரு முதன்மை உதாரணமாவார்.” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
2004-ஆஸ்திரேலியா தொடரில் கங்குலி கேப்டன்சியின் கீழ் சேவாகுடன் ஆகாஷ் சோப்ரா களமிறங்கி நல்ல தொடக்கங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கருத்தை எதிரொலித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும், மின்னல் வேக பீல்டருமான ஜான்ட்டி ரோட்ஸ், “அவர் பவுலர்களிடம் கூட களத்தில் அதிகம் பேசுவதில்லை. காரணம், ஒவ்வொரு பவுலருக்கும் அவர் திட்டங்களை முன்கூட்டியே வகுத்து விடுகிறார். அவருக்காக அவரது பேட்டிங் பேசுகிறது, அவரது கேப்டன்சி பேசுகிறது. எனவே, ஸ்டம்புகளுக்கு பின்னால் அவர் பேசுவதில்லை.” என்றார்.