ரஞ்சி: மும்பையை 44 ரன்களுக்குச் சுருட்டிய கர்நாடகா

ரஞ்சி: மும்பையை 44 ரன்களுக்குச் சுருட்டிய கர்நாடகா
Updated on
1 min read

பெங்களூருவில் இன்று தொடங்கிய ரஞ்சி டிராபி முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 21 விக்கெட்டுகள் சரிந்தன. மும்பை 44 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

1977-78 ரஞ்சி சீசனில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை இதற்கு முன்பு 42 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இது இரண்டாவது அதிகுறைவான மொத்த ரன் எண்ணிக்கையாகும்.

டாஸ் வென்ற கர்நாடகா கேப்ட்ன் வினய் குமார் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணியில் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா மட்டுமே அதிகபட்சமாக 68 ரன்களை எடுக்க அவருக்கு அடுத்தபடியாக கருண் நாயர் 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். மணீஷ் பாண்டே 34 ரன்களுக்குத் தாக்குப் பிடித்தார்.

கர்நாடகா 202 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. மும்பை அணியின் எஸ்.என்.தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், மோட்டா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

தொடர்ந்து தன் முதல் இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி மொத்தம் 15.3 ஓவர்களில் 44 ரன்களுக்குச் சுருண்டது. வினய் குமார் 8 ஓவர்களில் 1 மெய்டனுடன் 20 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட முடிவில் கர்நாடகா அணி தன் 2-வது இன்னிங்ஸில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது 22 விக்கெட்டுகள் அல்லவா? என்று கேட்கலாம். ஆனால் மும்பை பேட்ஸ்மென் அபிஷேக் நாயர் காயம் காரணமாக இறங்கவில்லை அதனால் ஒருநாளில் 21 விக்கெட்டுகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மொத்தம் 5 மும்பை பேட்ஸ்மென்கள் ரன் எடுக்காமல் பூச்சியத்தில் ஆட்டமிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in