ஓய்வு நாட்கள் வீரர்களின் ஆற்றலை ரீ-சார்ஜ் செய்திருக்கும்: தோனி

ஓய்வு நாட்கள் வீரர்களின் ஆற்றலை ரீ-சார்ஜ் செய்திருக்கும்: தோனி
Updated on
1 min read

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பிறகான ஓய்வு நாட்கள் வீரர்களை ரீ-சார்ஜ் செய்திருக்கும் என்று இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

"4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சுலபமல்ல. எனவே இந்த இடைவெளி வீர்ர்களது ஆற்றல்களை ரீ-சார்ஜ் செய்திருக்கும். ஆனால்.. இதையும் காலம்தான் தீர்மானிக்கும்.” என்றார்.

நேற்று தோனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குர்கவானில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவி சாக்‌ஷியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக தோனி தெரிவித்தார். இந்தத் தருணத்தில் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? என்ற கேள்விக்கு, “அப்படி தோன்றவில்லை. கடவுள் அருளால் பெண் குழந்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்.

ஆனால், இப்போதைக்கு தேசக்கடமையில் ஈடுபட்டுள்ளதால் மற்ற விஷயங்கள் காத்திருக்கட்டும். உலகக்கோப்பை என்பது மிக முக்கியம்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி குறித்து நிறைய பேர் பல்வேறு விதமான கருத்துகளை கூறிவருகின்றனர். ஆனால், ஆஸ்திரேலியா, இலங்கை என்று மற்ற அணிகளுடன் விளையாடுவது போலத்தான் நான் இந்தப் போட்டியையும் பார்க்கிறேன்.

பரம்பரை வைரி என்ற எண்ணத்தில் சிந்திக்கத் தொடங்கினால், நாம் நமக்கு நாமே நெருக்கடியை அதிகரித்துக் கொள்வதாகவே முடியும்.

கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக களத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறோம், அதாவது கிரிக்கெட் களத்தில் ஆட்டம் தொடர்பான உணர்வுகளுக்கே மதிப்பளித்து வந்துள்ளோம். வீரர்களுக்கு இடையிலான வார்த்தை தகராறுகளைக் குறைத்து வந்துள்ளோம்.

கிரிக்கெட்டை அமைதியாக ஆடுவதுதான் நல்லது. ஏனெனில் விளையாட்டை நாம் கடினமாக விளையாட நினைக்கிறோம், ஆனாலும் ஆட்ட உணர்வுகளை மீறிவிடக்கூடாது.

அணியில் தற்போது உள்ள ஒரு விஷயம் என்னவெனில் வீரர்களாகட்டும் பயிற்சியாளர்களாகட்டும் இந்திய-பாக். போட்டி குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகம் யோசிக்காமல் இருப்பதே.

ஆம்.! நாங்கள் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அளவுக்கதிகமாக யோசிப்பதில்லை."

இவ்வாறு கூறியுள்ளார் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in