சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல்

சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல்
Updated on
1 min read

அணியின் நன்மைக்காக சச்சின் டெண்டுல்கர் பின்னால் களமிறங்க விரும்பினோம், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை என்கிறார் கிரெக் சாப்பல்.

2007-உலகக்கோப்பை போட்டிகளின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸி.-யின் கிரெக் சாப்பல் தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் பிளவு ஏற்படக் காரணம் என்ன என்பதை விவரித்தார்.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சானல் ஒளிபரப்பிய 'கிரிக்கெட் லெஜண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் சாப்பல் அப்போது நடந்ததை விவரிக்கும் போது, சச்சின் டெண்டுல்கர் தொடக்கத்தில் இறங்காமல் அதன் பிறகு களமிறங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் சச்சின் அதனை விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

"அணிக்கு எது நல்லது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர் முடிவெடுப்பார் என்றே நான் எதிர்பார்த்தேன், நினைத்தேன்...ஆனால் அவர் தொடக்கத்தில் களமிறங்குவதையே விரும்பினார். இதுதான் எங்களிடையே ஏற்பட்ட பிளவுக்குப் பிரதான காரணம்.

அவர் தொடக்கத்தில் களமிறங்குவதை அதிகம் விரும்பினார், ஆனால், மே.இ.தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் அவர் சற்று பின்னால் களமிறங்க நாங்கள் விரும்பினோம். அதற்கான தேவையும் இருந்தது. மிடில் ஆர்டரில்தான் அணியின் பிரச்சினை இருந்தது. தொடக்கத்திற்கு வேறு வீரர்கள் அணியில் இருந்தனர்.

இந்த ஏற்பாட்டுக்கு தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட சச்சின் டெண்டுல்கர், திடீரென அவ்வாறு இறங்க முடியாது என்று மறுதலித்தார். ஆனால், நான் அவரை மிடில் ஆர்டரில் இறங்கச் செய்தேன். இங்குதான் எனக்கும் அவருக்கும் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கின. அதன் பிறகே அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பவில்லை. இப்படி நடக்கவில்லையெனில் மாற்றுத் தீர்வை நான் கண்டுபிடித்திருப்பேன்.” என்றார்.

அதே போல் சவுரவ் கங்குலி பெயரைக் குறிப்பிடாமல் அவருடனான பிரச்சினையையும் இதே நிகழ்ச்சியில் சாப்பல் விளக்கினார்:

"இந்திய கிரிக்கெட் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில், அணியில் எப்படியாவது இடத்தை (வீரர்கள்) தக்கவைக்க வேண்டும் என்ற குறிக்கோளே இருந்தது, சிறந்த அணியாக வேண்டும் என்ற குறிக்கோள் (வீரர்களிடத்தில்) இல்லை.

ஆனால், நான் முயற்சி செய்தது என்னவெனில், அவர்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதையே. நாங்கள் சில மாற்றங்களைச் செய்தோம், அது வெற்றிகரமாகவும் அமைந்தது, ஆனால் இந்த நடைமுறையில் சிலருடன் கருத்து வேறுபாடுகளும், மனத்தாங்கலும் ஏற்பட்டன.

இந்த நடைமுறையில் கேப்டனை (கங்குலி) நீக்க வேண்டியதாயிற்று. இதனையடுத்து நிகழ்வுகள் சங்கிலித் தொடரானது. அணியில் நீடிப்பதற்கு தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர் (கங்குலி) செய்யவில்லை. அதன் பிறகு அவர் அளித்த உறுதி மொழியையும் காப்பாற்றவில்லை.” என்று கூறியுள்ளார் கிரெக் சாப்பல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in